ரேஷன் கார்டு வைத்துள்ள தமிழ்நாட்டு பெண்கள் 10 லட்சம் ரூபாய் தொழில் கடன் பெறுவது எப்படி?
Top Tamil News December 19, 2025 08:48 PM

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (Tamilnadu Women Entrepreneur Empowerment Scheme (TWEES) என்ற திட்டம், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் செயல்படுத்தப்படும் ஒரு பெருந்திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன், அதிகபட்சம் ரூ.2.00 லட்சம் 10 இலட்சம் வரை வங்கிக்கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

யாரெல்லாம் இத்திட்டத்தில் பயனடையலாம்?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழ் நாட்டை சார்ந்த 18 வயது முதல் 55 வயது வரை உள்ள மகளிர் மட்டும் விண்ணப்பம் செய்யலாம். கல்வித் தகுதி தேவையில்லை, இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் வரை உள்ள தொழில்களான வியாபாரம், சேவை, மற்றும் உற்பத்தி தொழில்களை தொடங்கலாம். 25 சதவித மானியத்துடன், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கிடைக்கும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினர்/ பட்டியலினத்தவர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் விதவைகள்/கைம்பெண்கள் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

இத்திட்டத்தின் கீழ் கடன் தொகையினை தேசிய வங்கிகள், தனியார் துறை வங்கிகள், சிறு நிதி வங்கிகள் (Small finance), வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC), தாய்கோ வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

என்னென்ன தொழில்கள் செய்யலாம்?

நேரடி வேளாண்மை சார்ந்த தொழில்கள், பண்ணை சார்ந்த தொழில்கள், எர்த்முவர்ஸ், கட்டிடம் மட்டும் கட்டுதல் தவிர்த்து சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எந்த தொழிலையும் செய்யலாம். உதாரணமாக உற்பத்தி பொருட்கள் தயாரிக்கவும், வளர்ந்து வரும் தொழிலான குழந்தைகள் பராமரிப்பு நிலையம், வீட்டில் உணவு தயாரித்து விற்பனை செய்தல் (Cloud Kitchens),சலவை நிலையம், யோகா/உடற்பயிற்சி நிலையம், அழகு நிலையம், ஊட்டச்சத்து நிலையம் போன்ற சேவை தொழில்களும் மற்றும் ஊட்ட சத்து உணவுப் பொருட்கள் பேக்கரி பொருட்கள் தயாரிக்கலாம்.

மேலும், ஐஸ்கிரீம், லெமன் கிராஸ் எண்ணெய், வெட்டிவேர் எண்ணெய், லேன்டானா (Lantana) ஆயத்த ஆடைகள், சிறுதானிய உணவு பொருட்கள் எம்ப்ராயடரி, பேப்பர் பிளேட், ஹைட்ரோ பானிக்ஸ் (மண்ணில்லா விவசாயம்), சத்து உருண்டைகள், பொம்மை பொருள்கள் போன்றவை தயாரிக்கவும் விண்ணப்பம் செய்யலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்க www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதள முகவரியில் மகளிர் தொழில் முனைவோர் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்கள் பெறவும், கூடுதல் வழிகாட்டுதலுக்கும் 8925533995, 8925533996, 8925533997 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆகவே தகுதியும் ஆர்வமும் உள்ள மகளிர் தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.