திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஜெயசீலன் என்ற இளைஞர், சமூக வலைதளங்களில் தன்னை ஒரு கல்லூரி மாணவர் போலக் காட்டி சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் நெருக்கமாகப் பழகி புகைப்படங்களைப் பகிர்ந்து வந்த நிலையில், ஜெயசீலனின் நடத்தையில் மாற்றம் தெரிந்ததால் அந்த மாணவி அவருடனான காதலை முறித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயசீலன், மாணவி தனக்கு அனுப்பிய புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
மாணவி இதற்குப் பணியாததால், ஆத்திரத்தில் அவரது புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் புகார் அளிக்க, அவர்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் ஜெயசீலன் செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.