ஈரோட்டில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றி கழகம்) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது அவர், “அண்ணன் செங்கோட்டையன் வந்த பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது. ஈரோடு மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் தற்போதைய ஆட்சியின் ஊழல் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இங்கு இருக்கும் அமைச்சர்கள் டாஸ்மாக் நிர்வாகத்தையே பிரதானமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால், அது தவெகவால் மட்டுமே சாத்தியம்” என்றார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட இளைஞர் மாநாட்டை சுட்டிக்காட்டிய அவர், “அந்த மாநாட்டில் இளைஞர்கள் இல்லை. ஆனால் அப்பா–மகன் என இருவர் மட்டும் ‘இளம் பெரியார்’ என அழைக்கப்படுகிறார்கள். பெரியாரின் வரலாறே தெரியாதவர்களை இளம் பெரியார் எனச் சொல்லுவது, ஈரோட்டு மண்ணில் 70 ஆண்டுகளாக நடைபெற்ற சமூக நீதிக்கான உழைப்பை அவமதிப்பதாகும்” என விமர்சித்தார்.
மேலும், “பெரியாரை அவமானப்படுத்தும்போது திராவிடர் கழகம் என்ன செய்து கொண்டிருக்கிறது? சமூக நீதியின் பொருள் கூட அறியாத ஒருவர் இளம் பெரியாரா? பெரியார் போன்ற தலைவர் இதுவரை உருவாகவில்லை; எதிர்காலத்திலும் உருவாக முடியாது” எனக் கூறினார்.
அவர் தொடர்ந்து, “ஒரே பெரியார், ஒரே தீரன் சின்னமலை, ஒரே அம்பேத்கர், ஒரே காமராஜர் தான். இந்த தலைவர்களை அவமதித்தால் தவெக போராட்டத்தில் குதிக்கும். 2026, 2031 என தொடர்ந்து பயணம் செய்வோம். மக்களிடமிருந்து விஜய்யை பிரிக்க முயன்றாலும், மக்கள் சக்தியும் பெண்கள் சக்தியும் அவர்மீது வைத்துள்ள நம்பிக்கையை யாராலும் பிரிக்க முடியாது” என்றார்.