சந்தேகத் தீயில் குடும்பம் சாம்பல்...! மனைவியை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற கணவன்...!
Seithipunal Tamil December 19, 2025 07:48 PM

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (31) சேலத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரும், சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த ரத்தினம்மாள் (25) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்குச் ஷாலினி (7), மாலினி (5) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, மனைவி மீது தேவையற்ற சந்தேகம் கொண்டிருந்த பிரகாஷ், ரத்தினம்மாளிடம் அடிக்கடி சண்டையிட்டு உடல் ரீதியாக தாக்கியதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் மனைவி ரத்தினம்மாளை தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்தினம்மாளை மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ரத்தினம்மாளின் தாயார் நவமணி, ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை அடித்துக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரகாசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.