தமிழக அரசியலில் "கடப்பாறை" என்ற வார்த்தை இப்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த பாரதியார் விழாவில் பங்கேற்ற சீமான், "பாரதியார் என்ற கடப்பாறையை வைத்து திராவிடத்தை வீழ்த்துவேன்" என்று முழங்கியிருந்தார். திராவிடக் கொள்கைகளுக்கு மாற்றாக தமிழ் தேசியத்தை முன்வைக்கும் அவர், ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளின் மேடையில் ஏறியது பெரும் சர்ச்சையானது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரோடு மக்கள் சந்திப்பில் விஜய், "பெரியார் என்ற கடப்பாறையை வைத்து அநீதிகளை வீழ்த்துவேன்" என்று அதே உவமையை பயன்படுத்திப் பேசியது அரசியல் வட்டாரத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இணைப்பதே தனது கொள்கை என விஜய் கூறுவதை சீமான் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், விஜய் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். "எங்கள் எதிரி யார் என்பதை நாங்கள் முன்பே அறிவித்துவிட்டோம்" என்று கூறியதன் மூலம், தனது முதன்மை போட்டி திமுக-வுடன் தான் என்பதையும், சீமான் போன்ற மற்ற சிறிய கட்சிகளைத் தான் ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதையும் விஜய் நாசுக்காக உணர்த்தியுள்ளார்.
இது 2026 தேர்தலில் வாக்கு வங்கிகளை தக்கவைத்து கொள்ள நடக்கும் ஒரு நுணுக்கமான சித்தாந்த போராகவே பார்க்கப்படுகிறது.
Edited by Siva