தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 100 நாள் வேலை உத்தரவாதம் என்ற சட்டம் புத்தகங்களில் மட்டும் வாழும் சட்டமாக மாறியுள்ளதாக கடுமையாக சாடியுள்ளார். பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் பெற்றது 20–25 நாட்கள் வேலைதான்; அதற்கான ஊதியமும் திட்டச் செலவும் மாதக் கணக்கில் விடுவிக்கப்படாமல், நிலுவைத் தொகைக்காகப் போராட வேண்டிய அவலம் உருவானதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது, மத்திய அரசின் புதிய விதிமாற்றங்களால் அதிகாரிகள் விரும்பினால் மட்டுமே வேலை வழங்கும் நிலை ஏற்பட்டிருப்பதால், ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதான கனவாக மாறிவிட்டதாகவும், நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறதாகவும் எச்சரித்துள்ளார்.
திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, ஜிஎஸ்டி மாற்றங்களுக்குப் பிறகு ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்களுக்கு சுமையல்ல, தண்டனை என கடுமையாக விமர்சித்துள்ளார். கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருந்த #MGNREGA திட்டத்தை முடக்குவதற்கு வரவேற்புப் பத்திரம் வாசிப்பது, மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர், டெல்லியை மகிழ்விக்க அறிக்கை விடுப்பதாகவும், தாம் அழுத்தம் கொடுத்த பிறகே விழித்துக்கொண்டு, திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரி ‘பட்டும் படாமல்’ அரசியல் செய்ததாகவும் சாடியுள்ளார்.
மேலும், 100 நாள் வேலை 125 நாட்களாக உயரும் என்ற கூற்று பேப்பரில் மட்டுமே உயிரோடு இருக்கும் பொய் என சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தொகைக் கட்டுப்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு சாதனை படைத்ததற்கே தண்டனையாக வேலை நாட்கள் குறைக்கப்படுவதாக முன்பே தாம் எச்சரித்ததை எதிர்க்கட்சித் தலைவர் வசதியாக மறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியில் செயல்பட்ட #MGNREGS திட்டத்தைச் சிதைத்து, மாநிலங்களின் தலையில் #VBGRAMG என்ற நிதிச் சுமையைச் சுமத்தும் முயற்சிக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்கும் எதிர்க்கட்சித் தலைவர், தனது ‘ஓனர்’ பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலுடன் வெளிப்படையாக VBGRAMG-ஐ ஆதரிக்க முடியுமா? என நேரடியாக சவால் விடுத்துள்ளார்.