ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, சுமார் இரண்டு மாதங்கள் கழித்து நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
விஜயமங்கலம் அருகே 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திடலில் 60-க்கும் மேற்பட்ட தடுப்பு பெட்டிகள் அமைக்கப்பட்டு, தொண்டர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பெட்டியிலும் 500 பேர் வரை அனுமதிக்கப்பட உள்ள நிலையில், நெரிசலை தவிர்க்க 80% இடங்களை மட்டுமே நிரப்ப காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. விஐபி-க்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விஜய் உரையாற்றும் வாகனத்திற்கும் முதல் வரிசைக்கும் இடையே 50 அடி இடைவெளியுடன் 3 அடுக்கு தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
தூரத்திலிருந்து வருபவர்கள் விஜயை தெளிவாகக் காணும் வகையில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன நிறுத்தம் மற்றும் குடிநீர் வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன. மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்க அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வருவதால், ஈரோடு மாவட்டமே அரசியல் பரபரப்பில் காணப்படுகிறது.
Edited by Siva