விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...
WEBDUNIA TAMIL December 18, 2025 11:48 PM


நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று ஈரோடு பெருந்துறையில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு 30 நிமிடங்கள் வரை பேசினார். வழக்கம்போல் ஆவேசமாக பேசிய அவர் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார். எம்ஜிஆர், மேடம் ஜெயலலிதா ஆகியோர் திமுகவை ஒரே வார்த்தையில் காலி செய்வார்கள். நான் கூட இவ்வளவு கோபமாக பேச வேண்டுமா என யோசிப்பேன்.

ஆனால், இப்போதுதான் உண்மை புரிகிறது. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி.. ஆனால் தவெக தூய சக்தி.. 2026 சட்டமன்ற தேர்தலில் தீய சக்தியான திமுகவுக்கும், தூய சக்தியான தவெகவுக்கும் இடையேதான் போட்டி’ என பேசினார்.

மேலும் ‘2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வெற்றி பெற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்துவிடும் என்று சொன்னார்கள்.. ஆனால், செய்யவில்லை’ என்பது உள்ளிட்ட பல அடுக்கடுக்கான புகார்களை சொன்னார் விஜய். மேலும் ‘நான்தான் உங்களுக்கு ஒன்றுமில்லையே.. என்னை பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதியிடம் விஜய் திமுகவை விமர்சனம் செய்தது பற்றி கேள்வி கேட்டபோது ‘ஏன் என்னிடமே கேள்வி கேட்கிறீர்கள்? அவரிடம் என்றாவது கேள்வி கேட்டுருக்கிறீர்களா?.. அவரை பேச விட்டுப் பாருங்கள்.. அப்போது தெரியும்’ என்று கூறியிருக்கிறார். அதாவது விஜய் மேடைகளில் மட்டும்தான் பேசுவார்.. செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்.. அப்படி பேசினால் அவரின் சாயம் வெளுத்துவிடும் என்பது போல கருத்தைத் தெரிவித்திருக்கிறார் உதயநிதி.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.