கூட்ட நெரிசலை பயன்படுத்தி அட்டூழியம்...! - மாணவி புகாரில் கொத்தனார் போக்சோவில் கைது...!
Seithipunal Tamil December 18, 2025 11:48 PM

திருவாரூர் அருகே உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவி, வழக்கம்போல அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்றபோது அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதே பேருந்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த, கொத்தனாராக வேலை செய்து வரும் ஸ்ரீதர் (44) என்பவரும் பயணம் செய்துள்ளார்.

அப்போது பேருந்தில் கடும் கூட்டம் இருந்ததால், இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்ரீதரிடம் தனது பையை அந்த மாணவி கொடுத்துள்ளார். அந்த தருணத்தை தவறாக பயன்படுத்தி, ஸ்ரீதர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி உடனடியாக அருகிலிருந்த பயணிகளிடம் நடந்ததை தெரிவித்தார்.இதையடுத்து பயணிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஸ்ரீதரை பிடித்து, திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.