நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். அதேநேரம் அவர் அரசியல்வாதி ஆனது முதல் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவை தனது கொள்கை எதிரி என்று மட்டுமே சொல்லி வருகிறார். அதற்கு மேல் அந்த கட்சியை அவர் விமர்சிக்கவில்லை.
அதோடு நாட்டில் நடக்கும் எல்லா மக்கள் பிரச்சனைக்கும் அவர் கருத்து சொல்வதும் இல்லை. சிலவற்றுக்கு மட்டும் அவரின் பெயரில் அறிக்கை வருகிறது. சில முக்கியமான பிரச்சனைகள் பற்றி அவர் கருத்து தெரிவிப்பது இல்லை. அவர் கரூருக்கு சென்றபோது 41 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி கூட அவர் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கூட சமீபத்தில் பிரச்சனை வந்தது. ஆனால் ஒரு அரசியல்வாதியாக இருந்தும் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது ‘திருப்பரங்குன்ற விவகாரத்தில் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முன்னு இருக்கணும்.. கும்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கும்முனு இருக்கணும்.. அப்படின்னு யார் சொன்னா?.. விஜய்தான் சொன்னாரு..
அரசியல்வாதி என்றால் கருத்து சொல்லணும்.. சரினா சரின்னு சொல்லுங்க.. தப்புன்னா தப்புன்னு சொல்லுங்க.. இப்படி வாயை மூடிட்டு இருந்தா உங்களை நம்பி எப்படி மக்கள் ஆட்சியை கொடுப்பாங்க?.. புதுச்சேரியில் பேசுன விஜய் அங்கு எம்.எல்.ஏ ஒருவர் சிறுபான்மையினர் என்பதால் அவருக்கு பதவி கொடுக்கப்படவில்லை என பேசினார். அங்கு சிறுபான்மையினருக்காக பேசின விஜய் திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மையினருக்காக ஏன் பேசவில்லை?..
ஒன்னு ரோட்டுக்கு இந்த பக்கம் நில்லுங்க.. இல்ல அந்த பக்கம் நில்லுங்க.. நடுவுல நின்றா எப்படி?.. நடுவுலதான வண்டி வரும்.. விஜய் அரசியலில் இருக்கட்டும்.. அவரின் கொள்கையை முன் வைக்கட்டும்.. தேர்தல் சந்திக்கட்டும்.. மக்கள் முடிவு பண்ணட்டும்.. களத்தில் நாம் மோதுவோம்.. மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கணும்.. முக்கிய பிரச்சினைக்கு வாயைத் திறந்து பேசுங்க’ என பொங்கியிருக்கிறார்.