புதிதாக அரசியலுக்கு வந்தவர்களாலும், ஏற்கனவே இருப்பவர்களாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் மக்கள் ஆதரவு திமுக தலைமையிலான கூட்டணிக்கே இருப்பதாகவும், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுக மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
மதிமுக சார்பில் மது ஒழிப்பை வலியுறுத்தி ஜனவரி 2 முதல் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள உள்ள வைகோ, இதனை தொடங்கி வைக்க முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றும், இதை தொடக்க காலம் முதலே தான் கூறி வருவதாகவும் தெரிவித்தார். காலை உணவுத் திட்டம், விடியல் பயணத் திட்டம் உள்ளிட்ட திமுக அரசின் திட்டங்கள் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு பிரம்மாண்ட வெற்றியை பெற்றதாகவும், திமுக மீதான விமர்சனங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் என்றும் வைகோ தெரிவித்தார். எந்த வகையான அரசியல் அறைகூவல்கள் எழுந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.