குவாடலூப், லார்டெஸ், ஃபாத்திமா, பிலார், டொலோரெஸ், கேண்டெலேரியா, கோரோமோட்டோ.
கத்தோலிக்கர்கள் மத்தியில் பிரபலமான இந்தப் பெயர்கள் அனைத்துக்கும் இடையே உள்ள பொதுவான அம்சம் என்ன தெரியுமா? இவையனைத்தும் ஒருவரையே குறிக்கின்றன; அந்த ஒருவர் இயேசுவின் தாயான மேரி.
கிறிஸ்தவ கோட்பாட்டின்படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நாசரேத்தில் பிறந்த ஒரே இளம் யூதப் பெண்ணைக் குறிக்கின்றன. அதோடு, அந்தப் பெண் தனது 15 வயதில் எந்தவொரு ஆணுடனும் பாலுறவு கொள்ளாமல், தூய ஆவியால் கருவுற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கத்தோலிக்க இறையியலில், இந்தப் பல்வேறு பெயர்கள் 'அட்வகேஷன்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. அந்தப் பதம், 'அழைத்தல்' அல்லது 'வேண்டுதல்' எனப் பொருள்படும் லத்தீன் வார்த்தையான 'அட்வோகேர்' என்பதில் இருந்து வந்தது.
ஆனால், இயேசுவின் தாயாரின் அடையாளம் குறித்து உலகம் முழுக்கப் பல்வேறு வடிவங்கள் இருப்பது ஏன்? அவருக்கு நூற்றுக்கணக்கான பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதன் காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு, பிபிசி பிரேசில் பிரிவைச் சேர்ந்த எடிசன் வெய்கா, நிபுணர்கள் உதவியுடன் விடையளித்துள்ளார்.
இடம் மற்றும் கலாசாரத்தைப் பொருத்து சூட்டப்பட்ட பெயர்கள்"கன்னி மேரிக்கு வழங்கப்படும் பெயர்கள், அவர் எவ்வாறு காட்சியளித்தார் என்பதைப் பொருத்துப் பெரிதும் அமைகின்றன. பொதுவாக, அவர் காட்சியளித்த இடத்தின் பெயரோ அல்லது அப்போது நிலவிய சூழ்நிலைகளோ அவருக்குப் பெயராகச் சூட்டப்படுகின்றன," என்று விளக்கினார் ரியோ டி ஜெனிரோ (பிரேசில்) மறைமாவட்டத்தின் ஆலோசகரான அருட்தந்தை அர்னால்டோ ரோட்ரிகஸ்.
மறுபுறம், சா பாலோவின் போன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் சமகால புனிதக் கலை, மதம் மற்றும் வரலாறு குறித்தான ஆய்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மத ஆராய்ச்சியாளர் வில்மா ஸ்டீகல் டி டொமாசோ, இந்தப் பெயரிடும் முறைகள், "ஒவ்வொரு மக்கள் குழுவுக்கும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும், ஒவ்வொரு கலாசாரத்திற்கும்" மாறுபட்டு இருந்ததாகக் கூறுகிறார். அதோடு, "எண்ணற்ற சூழ்நிலைகளைப் பொருத்து நடக்கக் கூடிய நிகழ்வுகளுக்கு ஏற்ற பொருத்தமான பட்டங்களே" அதற்குக் காரணம் என்றும் உறுதிபடக் கூறினார்.
ALBERTO PIZZOLI/AFP via Getty Images போப் பதினைந்தாம் லியோ சமீபத்தில் கத்தோலிக்க மதத்தில் அன்னை மேரியின் பங்கைப் பற்றித் தெளிவுபடுத்தும் ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
அபரேசிடாவின் மரியன் அகாடமியின் மன்ற உறுப்பினரான அவர், "இந்தப் பட்டங்களில் பலவும், கத்தோலிக்க திருச்சபையின் கன்னி மேரி பற்றிய கோட்பாடுகளைக் குறிக்கக்கூடிய 'கோட்பாட்டுப் பெயர்கள்' என்று அழைக்கப்படுகின்றன. மத மரபின்படி, இவை விசுவாசிகள் நம்ப வேண்டிய விசுவாச உண்மைகளாகும்," என்றும் குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக, மாசற்ற கருத்தரிப்பு (Immaculate Conception) என்ற பெயர் இங்கிருந்துதான் வருகிறது. இது போப் ஒன்பதாம் பயஸ் கையெழுத்திட்ட ஓர் ஆவணத்தில் இருந்து உருவானது. அது "மேரியை ஆதி பாவத்தின் கறையில் இருந்து விடுபட்டவர் என்று அறிவிக்கிறது" என்று ஆராய்ச்சியாளர் வில்மா ஸ்டீகல் டி டொமாசோ விளக்கினார்.
அதோடு, அவரை கன்னி மேரி என்று அழைப்பதுகூட அப்படித்தான், ஏனெனில், "649இல் நடந்த லேட்டரன் கவுன்சில், கிறிஸ்துவின் தாயுடைய 'நித்திய கன்னித்தன்மையை ஓர் உண்மை' என்று பிரகடனப்படுத்துகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"உள்ளூர் பக்திக்கு வழிவகுத்த மேரியின் தோற்றம் நிகழ்ந்த இடங்களுக்கு ஏற்பவும் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அபரேசிடா, குவாடலூப், லார்டெஸ், ஃபாத்திமா, லோரெடோ, மான்ட்செராட் போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் சிறு நகரங்களுக்கும் இந்த ஒற்றுமை பரவலாக உள்ளது," என்று அவர் கூறினார்.
மேலும், "கன்னி மேரிக்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கபடக் காரணம், அவர் காட்சியளித்த இடங்களுடன் அந்தப் பெயர்கள் பிணைக்கப்பட்டு இருப்பதுதான்," என்று கூறுகிறார், இத்தாலியின் ரோமில் உள்ள போன்டிஃபிகல் கிரிகோரியன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் வாடிகன் நிபுணரும் கத்தோலிக்க மத வரலாற்றின் ஆராய்ச்சியாளருமான மிர்டிசெலி மெடிரோஸ்.
Universal Images Group via Getty Images முதல் மரியாள் தரிசனங்களில் ஒன்று கி.பி. 40ஆம் ஆண்டு ஸ்பெயினில் நிகழ்ந்தது, அதில் அவர் 'அவர் லேடி ஆஃப் தி பில்லர்' என்று அழைக்கப்படுகிறார்
"அவரது தரிசனம் தோன்றிய இடத்தின் பெயரையே அவருக்குச் சூட்ட வேண்டுமென்று எந்தக் கடுமையான விதியும் இல்லை. ஆனால், பொதுவாக இந்த தரிசனங்கள், அவற்றை திருச்சபை அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்து அங்கீகரிப்பதற்கு முன்பே, மக்களின் நம்பிக்கையில் இருந்தும் பக்தியில் இருந்தும் உருவாயின.
இதன் காரணமாக, சாதாரண மக்கள்தான் முதலில் அந்தத் தோற்றத்திற்கு ஒரு பெயரைச் சூட்டி, அப்படியே அழைக்கத் தொடங்குகிறார்கள். பின்னர் திருச்சபை அதை ஆய்வு செய்து ஒரு அதிகாரபூர்வ முடிவை எடுக்கலாம். ஆனால், அதற்குள்ளாகவே அந்தப் பெயர் பிரபலமாகிவிடுகிறது," என்று மெடிரோஸ் விளக்கினார்.
இப்படியாக உருவான அனைத்துப் பெயர்களுக்கும் "அவற்றுக்கான காரணம் இருப்பதாக" பிரேசிலிய புனிதர் வரலாற்று அகாடமியின் நிறுவனர் மற்றும் சியராவில் உள்ள வாலே டோ அரகாவ் மாகாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜோஸ் லூயிஸ் லிரா கூறுகிறார்.
"அவர் 'எங்கள் தூய ஃபாத்திமா அன்னை.' ஏனெனில், அவர் அந்த இடத்தில்தான் தோன்றினார். அவர் நல்ல பிரசவத்தின் தாய், ஏனெனில் அவர் பிரசவத்தின்போது பெண்களுக்கு ஆன்மீக ரீதியாக உதவுகிறார். அவர் நல்ல ஆலோசனைக்கான அன்னை. ஏனெனில், அவர் தனது பிள்ளைகளுக்கு எப்போதும் வழிகாட்டுதலை வழங்குகிறார்," என்று லிரா கூறினார்.
மேலும், "இந்தப் பட்டங்கள் அனைத்தும் ஒரே தாய்க்கு உரியவை. ஏனெனில், அவர் முழு மனித குலத்தின் தாய். ஒவ்வோர் இடத்திலும் மக்கள் தங்கள் பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப அவரை சித்தரிக்கிறார்கள், வழிபடுகிறார்கள். ஆனால் நிச்சயமாக, பொது வழிபாட்டிற்கு திருச்சபையின் ஒப்புதல் அவசியம்," என்றும் கூறினார் அவர்.
WIKIPEDIA ரோமில் உள்ள பிரிசில்லா நிலவறைகளில், கன்னி மேரியின் முதல் உருவப்படம் என்று கருதப்படும் ஒரு சித்திரம் காணப்படுகிறது தாயின் கோரிக்கை கட்டளைக்குச் சமம்
கன்னி மேரியின் மீதான பக்தி, கிறிஸ்தவத்தின் தொடக்க காலம் முதலே இருந்து வருகிறது. ஒரு தாயின் கோரிக்கையை யாரும் மறுப்பதில்லை என்ற அடிப்படையில், அவர் கிறிஸ்துவிடம் நேரடிப் பாலமாகச் செயல்படுகிறார் என்ற பார்வையை இது கொண்டுள்ளது.
சுவிசேஷங்களிலேயே இருக்கும் ஒரு முக்கியமான பகுதி இந்தக் கருத்தை வலுப்படுத்துகிறது. அது யோவானின் சுவிசேஷத்தில் மட்டுமே காணப்படும் கானாவூர் திருமணத்தில் நடந்த அற்புதத்தைப் பற்றியதாகும். அதில் இயேசு தனது முதல் அற்புதத்தைச் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த சுவிசேஷத்தின்படி, அவர் தமது தாயுடன் கலந்துகொண்ட அந்தத் திருமண விழாவின் விருந்தில் விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்ட திராட்சை ரசம் தீர்ந்துவிட்டதை விருந்து ஏற்பாட்டாளர்கள் கவனித்தனர். அப்போது மேரி, இயேசுவை தனியாக அழைத்துச் சென்று நடந்ததை விளக்கினார். பிறகு இயேசு, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி, விருந்து தொடர்வதற்கு வழிவகுத்தார்.
"விருந்து முடிவதற்குள் பானங்கள் தீர்ந்துவிட்டால், அது அந்தத் தம்பதிக்கு அவமானமாக இருந்திருக்கும். மேரி இயேசுவிடம் அதில் தலையிடும்படி கேட்டுக்கொண்டார். அங்கு ஒரு பரிந்துரையாளராக அவரது பங்கு முக்கியத்துவம் பெறுகிறது," என்று அருட்தந்தை அர்னால்டோ ரோட்ரிகஸ் விளக்கினார்.
மரியன்னை மீதான பக்தி, விவிலிய நூல்களில் வரும் மற்றொரு பகுதியையும் அடிப்படையாகக் கொண்டது.
சுவிசேஷங்களின்படி, இயேசு சிலுவையில் மரித்துக் கொண்டிருந்தபோது, அவர் தனது தாயை கவனித்துக் கொள்ளுமாறு அப்போஸ்தலரான (இயேசுவால் அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் என்று பொருள்) யோவானிடமும், யோவான் அவருக்கு மகனைப் போல் இருப்பாரென்று மேரியிடமும் தெரிவித்தார்.
"இந்தச் செயலில், யோவான் முழு மனித குலத்தையும் பிரதிநிதித்துவம் செய்கிறார். மேரி நமது தாயாக ஆனார். திருச்சபை நமக்குக் கற்பிப்பது போல, அவர் ஒரு பாவமில்லாத புதிய ஏவாள். இவ்வாறு, புனித கன்னி மேரி ஒரு தாயைப் போல அக்கறையுடன் மனிதகுலதைப் பாதுகாத்து, கவனித்துக் கொள்கிறார்," என்று லீரா சுட்டிக்காட்டினார்.
Getty Images கானாவூர் திருமணத்தைப் பற்றிய விவிலிய பகுதி, மரியாள் மீதான பக்தியை ஆதரிக்கும் காரணிகளில் ஒன்று. ஏனெனில், இயேசு எப்போதும் தனது தாயின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பார் என்று நம்பப்படுகிறது. மரியாளை அங்கீகரித்த எபேசு சங்கம்
பிரேசிலில் உள்ள அபரேசிடா தேசிய ஆலத்தின் முன்னாள் தலைவரும், மரியாலஜி அறிஞருமான அருட்தந்தை வால்டிவினோ குய்மரேஸின் ஆய்வுகள்படி, கிறிஸ்துவின் தாயுடைய சக்தியில் இருக்கும் இந்த நம்பிக்கையின் பழமையான பதிவுகள் 2ஆம் நூற்றாண்டு காலம் வரை உள்ளன.
"பிரிசில்லாவின் நிலவறைகளில், முதல் கிறிஸ்தவர்கள் கூடிவந்த ஓரிடத்தில், இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மரியன்னையின் ஓவியங்களைக் காண முடிகிறது. இந்தத் தொல்பொருள் சான்றுகள் ஆரம்பக்கால கிறிஸ்தவர்கள் மேரியை மதித்து, வணங்கியதாகக் காட்டுகின்றன," என்று அவர் கூறினார்.
அதோடு, "அந்த சுரங்கக் கல்லறைகளில், குழந்தை இயேசுவுடன் கன்னி மேரி இருக்கக்கூடிய பழமையான உருவத்தின் சுவரோவியத்தை நாங்கள் கண்டறிந்தோம்," என்று டி டொமாசோ குறிப்பிட்டார்.
இருப்பினும், முதல் தரிசனம், கிபி 40ஆம் ஆண்டைச் சேர்ந்தது. மேலும், அந்த நேரத்தில் மேரி உயிருடன் இருந்த காரணத்தால், அவர் உண்மையில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றியிருக்கக் கூடிய ஒரு நிகழ்வாக இருந்திருக்கும்.
கிறிஸ்தவ மரபின்படி, கன்னி மேரி, அப்போஸ்தலரான யாக்கோபுக்கு, அவர் பிரசங்கம் செய்துகொண்டிருந்த தற்போதைய ஸ்பெயினின் ஜராகோசா நகரில் காட்சியளித்தார். அந்த இடத்தில் ஒரு சிறிய தேவாலயம் கிறிஸ்தவத்தின் ஆரம்பக் காலத்தில் அங்கு கட்டப்பட்டதற்கான பதிவுகள் உள்ளன.
"இந்தத் தரிசனத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர் "அவர் லேடி ஆஃப் தி பில்லர்" என்பதாகும். ஏனெனில் கூற்றுகளின்படி, மேரி அபோஸ்தலர் யாக்கோபுக்கு ஒரு தூணைக் காட்டி, அந்த இடத்தில் ஒரு புனித தேவாலயம் கட்டுமாறு கேட்டார்," என்று மெடிரோஸ் விளக்கினார்.
LUIS ROBAYO/AFP via Getty Images மேரி வெனிசுவேலாவின் காவல் தெய்வமாகக் கருதப்படுகிறார். அங்கு அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயரானது, அவரை நெடுங்காலத்திற்கு முன்பு பார்த்ததாகக் கூறப்படும் ஓர் உள்ளூர் பழங்குடித் தலைவரின் பெயரில் இருந்து வந்தது
'அவர் லேடி ஆஃப் தி ஸ்னோஸ்' என்ற மற்றொரு கதையும் ஆராய்ச்சியாளர்களால் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இதன்படி, மேரி 352ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோமில் தோன்றினார். அவரது தரிசனத்தைத் தொடர்ந்து, அந்த நிகழ்வின் விளைவாகவே, ரோமில் பசிலிகாவின் புனித மேரி மேஜர் என்ற பெயரிலான பெரிய தேவாலயம் கட்டப்பட்டது.
கிறிஸ்தவம் தொடங்கியது முதலே மேரி தொடர்ந்து மதிக்கப்பட்டும் வணங்கப்பட்டும் வருகிறார். எண்ணற்ற மத ரீதியான எழுத்துகளிலும், உருவப் படங்களைப் போன்ற கலை வடிவங்களிலும் அவர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
அறியப்பட்டதிலேயே மிகவும் பழமையான மரியாளின் கீதம் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அது லத்தீன் மொழியில் 'சப் டுவம் பிரெசிடியம்' (உங்கள் பாதுகாப்பின் கீழ்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், "431ஆம் ஆண்டில் நடைபெற்ற எபேசு சங்கம், மரியாள் 'இறைவனின் அன்னை' என்ற இறையியல் கோட்பாட்டை ஆராய்ந்து அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து மற்ற பட்டங்களும் வழங்கப்பட்டன" என்று மெடிரோஸ் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், பல நூற்றாண்டுகளாக, இந்தக் கதைகள் மிகவும் இயல்பாகிவிட்டன. ரோட்ரிகஸின் கூற்றுப்படி, இன்று புனித மேரி சுமார் 1,100 பெயர்களால் அறியப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
"வரலாற்று ரிதியான கண்ணோட்டத்தில், இந்த தரிசனங்கள் மிகவும் குறிப்பிட்ட காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளன," என்று மெடிரோஸ் கூறினார்.
"அவை உண்மையா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது வரலாற்று ஆசிரியர்களாகிய நமது வேலையில்லை. ஆனால், பல தரிசனங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் மற்றும் சமூகச் சூழலில் நிகழ்கின்றன என்பது மட்டும் உண்மை.
ஃபாத்திமாவின் விஷயமும் அப்படித்தான். அதில் வழங்கப்படும் செய்தி மிகவும் சுவாரஸ்யமானது. அது பல ஆண்டுகளுக்குப் பிறகு கன்யூனிசத்தின் மீது திருச்சபை எடுக்கவிருந்த நிலைப்பாட்டிற்கு இணக்கமான ஒன்றாகவும் இருந்தது," என்று ஆராய்ச்சியாளர் மெடிரோஸ் விளக்கினார்.
Universal Images Group via Getty Images கன்னி மேரி தரிசனம் தந்த பிராந்தியம், பகுதி அல்லது கலாசாரத்தைப் பொருத்து, அவர் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகிறார்
"எடுத்துக்காட்டாக, அபரேசிடாவின் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். அதன் உருவம் அடிமைத்தனத்தை ஒழிப்பது தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டது. குவாடலூப்பின் விஷயத்தில், பழங்குடி அம்சங்களைக் கொண்ட கன்னி மேரி, சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக இருக்கிறார். இதுபோல நிறைய உள்ளன," என்று அவர் மேலும் விவரித்தார்.
ஆனால், திருச்சபை இந்த தரிசனங்களை எப்போதும் அங்கீகரிப்பதில்லை.
"இவ்வாறாக நிகழும் அனைத்து தரிசனங்களும் கத்தோலிக்க மதத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும். சில முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மற்றவை இன்னும் ஆய்வில் உள்ளன. மேலும், சிலவற்றுக்கு வழிபாட்டுச் சுதந்திரம் மட்டுமே கிடைத்துள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்த விஷயத்தில், கற்பனையாகத் தோன்றும் கன்னி மேரி கூறுவது கத்தோலிக்க திருச்சபையின் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப்போக வேண்டும். அதுமட்டுமின்றி, அந்தத் தரிசனத்தைக் கண்டவர்களின் தார்மீக மற்றும் உளவியல் தகுதிகளும்கூட பகுப்பாய்வு செய்யப்படுகின்றன" என்று அவர் விளக்கினார்.
மேரி குறித்த பார்வையை வரையறுத்த வாடிகன்பல நூற்றாண்டுகளாக, கன்னி மேரிக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. சில நேரங்களில் திரித்துவத்தையே (பிதா கடவுள், இயேசு மற்றும் தூய ஆவி) கன்னி மேரி மீதான பக்தி மறைத்துவிடுகிறது. இந்தக் காரணத்திற்காகவே, வாடிகன் சமீபத்தில் ஒரு நடவடிக்கையை எடுத்தது.
BBC பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நவம்பர் மாதத் தொடக்கத்தில், விசுவாசக் கோட்பாட்டிற்கான துறையானது, போப் லியோவால் கையெழுத்திடப்பட்ட ஓர் ஆவணத்தை வெளியிட்டது. அந்த ஆவணம், கத்தோலிக்க நம்பிக்கையில் இயேசுவுடைய தாயின் பாத்திரத்தை வரையறுக்கிறது.
அந்த ஆவணம், மேரிக்கு 'ரட்சிப்புக்குப் பங்களித்தவர்' என்ற பட்டத்தைப் பயன்படுத்துவதை ஒரு தவறான செயல் எனக் கருதி நிராகரிக்கிறது. மேலும் அவரை 'மத்தியஸ்தர்' எனக் குறிப்பிடுவதையும் விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அந்த ஆவணத்தின்படி, "இயேசு கிறிஸ்து உடனான நமது உறவில் இருந்து துண்டிக்கப்பட்டு, மேரி தாமே சுயாதீனமாக ஆன்மீக ஆற்றல்களை வழங்குவதாக இருக்கும் மக்களின் ஆபத்தான நம்பிக்கை நிறுத்தப்பட வேண்டும். அதற்கு இந்தத் திருத்தங்கள் அவசியம்."
வாடிகனுடைய இந்தத் தீர்மானத்தின் நோக்கம். மேரி கிறிஸ்துவுக்கு சமமான நிலையில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதே என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
"இதன் பொருள், இயேசுவின் அனுமதியின்றி மேரி அருள் வழங்குவதில்லை. 'அருள் நிறைந்த மரியே' ஜெபத்தில், மேரி நமக்காகப் பரிந்து பேச முடியும் ஆனால் நம்மை அவரால் காப்பாற்ற முடியாது என்ற இறையியலை உறுதி செய்கிறது" என்று பெண்ணியத்தில் கிறிஸ்தவம் என்ற நூலின் ஆசிரியரான மானுடவியலாளர் லிடிஸ் மேயர் பிபிசி பிரேசில் பிரிவிடம் விளக்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு