ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அவதார் தொடரின் மூன்றாம் பாகமான இந்த படம், $400 மில்லியனுக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி, உலகிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
2009ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ வெளியானது. உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி, வசூலில் சாதனை படைத்த அந்த படத்தைத் தொடர்ந்து, தற்போது ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ தயாராகியுள்ளது. இதில் சாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தயாரிப்பு செலவு மட்டும் $300 மில்லியனை கடந்துள்ளதாகவும், தொடர்ச்சியான படப்பிடிப்பு, மேம்பட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பணிகளை சேர்த்து மொத்த செலவு $400 மில்லியனை தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ₹3,614 கோடி ஆகும்.
இதன் மூலம், ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ஆன் ஸ்ட்ரேஞ்சர் டைட்ஸ்’, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’, ‘ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்’ போன்ற பிரம்மாண்ட படங்களின் வரிசையில் ‘அவதார் 3’ இணைந்துள்ளது. முந்தைய ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தை விட, இந்த படத்தின் பட்ஜெட் சுமார் $50 மில்லியன் அதிகமாக இருப்பதால், லாபம் காண உலகளவில் 2.5 மடங்கு வசூல் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஆரம்ப கட்ட கணிப்புகளின்படி, ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படம் அமெரிக்க உள்நாட்டு சந்தையில் மட்டும் $100 முதல் $130 மில்லியன் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாரிஸில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜேம்ஸ் கேமரூன், தற்போதைக்கு அவதார் நான்காம் பாகத்தை இயக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.