"நோயாளிக்கு தூய்மைப் பணியாளர்களின் மேலாளர் சிகிச்சையா?" - மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம் என்ன?
Vikatan December 19, 2025 07:48 AM

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோவில்பட்டி மட்டுமன்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளராக சுப்புராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விபத்தில் காயமடைந்த ஒருவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அதன் பின்னர், மருத்துவமனை ஊழியர்கள் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள கட்டிலில் அமர வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளர் சுப்புராஜ், தலையில் காயத்துடன் இருந்தவருக்கு, சிகிச்சை அளித்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த ஒருவர், இதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதற்குரிய வசதிகளும் பணியாளர்களும் முழுமையாக இல்லை. தலையில் அடிபட்டு வந்த நபருக்கு, தூய்மைப் பணியாளர்களின் மேலாளர் சிகிச்சை அளித்தது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால், பெரும் ஆபத்து நேரிடும்.

சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்களின் மேலாளர்

இந்த வீடியோ காட்சியைப் பார்த்த பின்பு, அரசு மருத்துவமனை மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். எனவே, சம்பந்தப்பட்ட மேலாளர் மீது மட்டுமல்ல, அவர் சிகிச்சை அளிக்கக் காரணமாக இருந்த பணி நேர மருத்துவர், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவப் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, ”தூய்மை பணியாளர்களின் மேலாளர், தலையில் காயத்துடன் வந்தவருக்கு காயத்தை சுத்தம் மட்டுமே செய்கிறார். அவர் அருகே மருத்துவர் இருக்கிறார். மேலும், அங்கே செவிலியர்களும் இருந்தனர்” எனக் கூறினர்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.