தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக–பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைய தயக்கம் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால், தேர்தல் நேரத்தில் தன்னை மற்றும் தனது ஆதரவாளர்களை தோற்கடிக்கும் வகையில் உள்ளடி வேலைகள் நடக்கலாம் என்ற அச்சமே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ள, அதிமுக–பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாஜக தலைமை உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் ஐ.ஜே.கே., அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி இடம்பெற்ற நிலையில், அதிமுக தனியாக களமிறங்கி தேமுதிகவை தன்னுடன் இணைத்திருந்தது. தற்போது நிலைமைகள் மாறி, சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, முன்பு என்டிஏவில் இருந்த கட்சிகளை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை என்டிஏவில் இணைய மாட்டேன்” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதனால், தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைவதற்காக மேற்கொண்ட முயற்சிகளும் இதுவரை பலனளிக்கவில்லை. இது தொடர்பாக பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டாலும், விதிக்கப்பட்ட நிபந்தனைகள் காரணமாக அந்த முயற்சிகள் இழுபறியில் உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததுடன், முக்கிய அரசியல் முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக நடத்த திட்டமிட்டிருந்த ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
மேலும், “தமிழகத்தில் என்டிஏ கூட்டணியில் எந்த கட்சிகளை சேர்ப்பது என்பது குறித்து இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமியே எடுப்பார்” என்ற தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டதும், பன்னீர்செல்வத்தின் தயக்கத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கூறுகையில், எடப்பாடி தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து சில இடங்களையே ஓபிஎஸ் அல்லது தினகரன் அணிக்கு வழங்க வாய்ப்பு இருப்பதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக தரப்பினர் உள்ளடி வேலை செய்து தோற்கடிக்கும் அபாயம் உள்ளதால் தான் என்டிஏவில் இணைய இருவரும் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறினர்.
இந்த சூழலில், அரசியல் குழப்பத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அல்லது தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்தக் கட்சிகளிடமிருந்து இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.