மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல வேடமிட்டு வந்த நபர் ஒருவர் சுமார் 2.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிவண்டியின் நார்போலி பகுதியில் உள்ள பிரிஜ்லால் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடைக்கு வந்த அந்த நபர், நகைகளை வாங்குவது போல நடித்துக் கடை ஊழியர்களிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.
ஊழியர்கள் நகைகளைக் காண்பித்துக் கொண்டிருந்த போது, கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு தட்டில் இருந்த தங்க நகைகளை அப்படியே அள்ளிக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். சில வினாடிகளிலேயே நடந்த இந்த மின்னல் வேகத் திருட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவரைப் பிடிக்க முயன்றும் பலனளிக்கவில்லை.
கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நார்போலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.