அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ரெட்வுட் சிட்டியில் உள்ள ஹார்டுவேர் கடை ஒன்றிற்குள் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று புகுந்து தீப்பிடித்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை சுமார் ஐந்து மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்ததோடு, அங்கிருந்த ரசாயனப் பொருட்கள் மீது மோதியதால் உடனடியாகத் தீப்பற்றியது.
கடையின் உள்ளே ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் அனைவரும் துரிதமாக வெளியேறியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. கார் மோதிய வேகத்தில் அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அந்த பெண் ஓட்டுநர் தவறுதலாக அழுத்தியதே இந்த விபத்திற்கு முதற்கட்ட காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.