Getty Images நெஞ்செரிச்சல் என்பது செரிமானக் கோளாறின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.
நம்மில் பெரும்பாலானோர் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் செரிமானக் கோளாறு (Indigestion) மற்றும் அதன் பல்வேறு அறிகுறிகளால் பாதிக்கப்படுகிறோம் என்று கூறுகிறது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பு.
குறிப்பாக, பண்டிகைக் காலங்களில், நாம் அதிக அளவு கொழுப்பு மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை உண்பதாலும், மது அருந்துவதாலும் இதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் இது தொடர்பான உதவிகளுக்காக என்ஹெச்எஸ் இணையதளம் மற்றும் தேடுபொறிகளில் தேடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்கிறது.
நெஞ்செரிச்சல் என்பது செரிமானக் கோளாறின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.
இது பொதுவாக மார்பில் ஒரு எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.
இது 'ஆசிட் ரிஃப்ளக்ஸ்' காரணமாக ஏற்படுகிறது.
லண்டன் குயீன் மேரி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், ராயல் லண்டன் மருத்துவமனையின் இரைப்பை குடல் நிபுணருமான மருத்துவர் பிலிப் வுட்லேண்ட் இது குறித்து விளக்குகையில், "வயிற்றில் உள்ள அமிலத்தன்மை கொண்ட சாறுகள், பொதுவாக அமிலம் இருக்கக்கூடாத உணவுப் பாதைக்குள்(உணவுக்குழாய்/குடல்) மேல்நோக்கிச் செல்வதையே ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்கிறோம்," என்றார்.
"நெஞ்செரிச்சல் என்பது ஆசிட் ரிஃப்ளக்ஸின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். இது மார்பக எலும்பின் பின்னால் ஒரு எரிச்சல் உணர்வாக உணரப்படுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தெந்த உணவுகள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகின்றன?"அதிகப்படியான அளவு உணவு உட்கொள்வது தான் செரிமானக் கோளாறு ஏற்பட மிக பொதுவான காரணமாகும், ஏனெனில் இது வயிற்றில் அழுத்தத்தை அதிகரிக்கிறது," என்று மருத்துவர் வுட்லேண்ட் விளக்குகிறார்.
"அதிக கொழுப்புள்ள உணவுகள் ஆசிட் ரிஃப்ளக்ஸை மோசமாக்கலாம். மதுபானம் (குறிப்பாக வெள்ளை ஒயின்) உணவுப் பாதையின் வால்வு தசையைத் தளர்த்தி, ஆசிட் ரிஃப்ளக்ஸை அதிகரிக்கும். சிலருக்கு காஃபின் மற்றும் சாக்லேட் கூட இதற்கான காரணியாக அமையலாம்."
"காரமான உணவுகள் அறிகுறிகளை மோசமாக்குவதாக சில மக்கள் கருதுகின்றனர். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், காரமான உணவுகள் ஆசிட் ரிஃப்ளக்ஸை நேரடியாக மோசமாக்காது, ஆனால் காரத்தில் உள்ள 'கேப்சைசின்' என்ற வேதிப்பொருள், அமிலம் தூண்டக்கூடிய அதே நரம்பு முனைகளைத் தூண்டுகிறது."
ராயல் பெர்க்ஷயர் மருத்துவமனை மற்றும் ரீடிங் பல்கலைக்கழகத்தின் இரைப்பை குடல் நிபுணர் மருத்துவர் ஜேம்ஸ் கென்னடி, நுரை வரும் குளிர்பானங்களும் இதற்கு ஒரு பொதுவான காரணம் என்று கூறுகிறார்.
Getty Images
ஏன் சில உணவுகள் செரிமானப் பிரச்னைகளை உண்டாக்குகின்றன என்பது குறித்து மருத்துவர் கென்னடி கூறுகையில், "சில உணவுகள் வயிற்றில் உள்ள திரவத்தின் pH அளவைக் குறைத்து, அதை அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாற்றக்கூடும்," என்கிறார்.
சாக்லேட் போன்ற பிற உணவுகளைப் பொறுத்தவரை, அவை உணவுப் பாதைக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள தசைகளைத் தளர்த்தி, வயிற்றில் உள்ள திரவங்கள் எளிதாக மேல்நோக்கிச் செல்ல வழிவகுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எந்த உணவுகள் உங்களுக்கு நெஞ்செரிச்சலைத் தூண்டுகின்றன என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?பிரச்னையை ஏற்படுத்தும் உணவுகளைக் கண்டறியும் வரை, ஒவ்வொரு உணவாகத் தவிர்த்துப் பார்ப்பதே இதற்குத் தீர்வாகும் என்று கென்னடி கூறுகிறார்.
இருப்பினும், அவர் ஒரு எச்சரிக்கையையும் முன்வைக்கிறார். "எந்தவொரு 'எலிமினேஷன் டயட்' முறையைப் பின்பற்றும்போதும், அனைத்து உணவுகளையும் ஒரே நேரத்தில் தவிர்த்துவிடக் கூடாது என்பது முக்கியம்."
"ஒரு நேரத்தில் ஒரே ஒரு உணவை மட்டும் நிறுத்திப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட உணவை நிறுத்தும் போது அறிகுறிகள் மறைந்து, மீண்டும் அந்த உணவைச் சேர்க்கும் போது அறிகுறிகள் தென்பட்டால், அந்த உணவே உங்கள் செரிமானப் பிரச்னைக்குக் காரணியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது."
Getty Images சில உணவுகள் நெஞ்செரிச்சலை குணப்படுத்துமா?
"துரதிர்ஷ்டவசமாக, ஆசிட் ரிஃப்ளக்ஸை நேரடியாகக் குணப்படுத்தும் குறிப்பிட்ட உணவுகள் என்று எதுவுமில்லை," என்கிறார் மருத்துவர் வுட்லேண்ட்.
"குறிப்பாக படுக்கைக்குச் செல்லும் நேரத்தில், அதிக கொழுப்புள்ள உணவைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நீங்கள் படுக்கையில் சமமாகப் படுக்கும்போது, வயிற்றிற்கும் உணவுப் பாதைக்கும் இடையிலான அழுத்த வேறுபாடு குறையும், இது ஆசிட் ரிஃப்ளக்ஸைத் தடுக்கும்" என்று அவர் பரிந்துரைக்கிறார்.
நெஞ்செரிச்சல் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட, உணவு முறை மூலம் அதைத் தடுப்பதே சிறந்தது என்று வுட்லேண்ட் மற்றும் கென்னடி ஆகிய இருவருமே கூறுகிறார்கள்.
"இணையதளங்களில் வரும் பல தகவல்கள் வெறும் செவிவழிச் செய்திகள் மட்டுமே. அவற்றுக்குப் பின்னால் நம்பகத்தன்மை மிகக் குறைவு," என்கிறார் வுட்லேண்ட்.
"நெஞ்செரிச்சலை தூண்டும் உணவுகளைக் குறைப்பதுடன், ஆரோக்கியமான உணவு முறையினால் வேறு சில நன்மைகளும் உள்ளன. உதாரணமாக, மத்திய தரைக்கடல் உணவு முறை (Mediterranean diet) என்பது பெரும்பாலும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவும், தாவர அடிப்படையிலான பொருட்கள் அதிகமாகவும், மதுபானம் குறைவாகவும் கொண்டது. இது உடல் பருமனை குறைக்க உதவும். உடல் பருமன் என்பது ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்படுவதற்கான ஒரு பெரிய காரணியாகும். ஏனெனில் அடிவயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும் போது, அது அமிலத்தை உணவுப் பாதைக்குள் மேல்நோக்கித் 'தள்ளுகிறது'," என்று வுட்லேண்ட் கூறுகிறார்.
மருத்துவர் கென்னடி தொடர்ந்து பேசுகையில், "ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் உணவு முறையில் பெரும்பாலும் எதைச் சேர்க்க வேண்டும் என்பதை விட எதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மீன் மற்றும் கோழி இறைச்சி நிறைந்த ஒரு 'மிதமான' உணவு முறை, மற்ற வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சேரும்போது ஆசிட் ரிஃப்ளக்ஸைக் குறைக்கும் என்பதற்குச் சில ஆதாரங்கள் உள்ளன. இது ஏன் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை" என்றார்.
"மத்திய தரைக்கடல் உணவு முறையில் மிதமான உணவு முறையை விட அதிகமான பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் கொண்டதாகவும், பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சி குறைவாகக் கொண்டதாகவும் இருக்கும். இது 'காஸ்ட்ரோ-ஓசோஃபேஜியல் ரிஃப்ளக்ஸ்' (Gastro-oesophageal reflux disease) நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது," என்றும் கென்னடி குறிப்பிட்டார்.
BBC "ஆசிட் ரிஃப்ளக்ஸ் உணவு முறையில் பெரும்பாலும் எதைச் சேர்க்க வேண்டும் என்பதை விட எதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது".
நெஞ்செரிச்சல் ஏற்படும் போது நாம் பொதுவாக எடுக்கும் ஒரு மூலிகை தீர்வு குறித்து கென்னடி எச்சரிக்கிறார். "புதினா டீ அல்லது புதினா எண்ணெய் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். இது அடிவயிற்று வலி, உப்பசம் மற்றும் வாய்வுத் தொல்லை போன்ற குடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது குடல் சுவர்களில் உள்ள மென்மையான தசைகளைத் தளர்த்துகிறது. ஆனால், இது உணவுப் பாதை மற்றும் வயிறு சந்திக்கும் இடத்திலுள்ள தசைகளையும் தளர்த்திவிடும். இதனால் கோட்பாடு ரீதியாக அதிக அமிலம் மேல்நோக்கிச் செல்ல வழிவகுத்து, நெஞ்செரிச்சல் அறிகுறிகளை இன்னும் மோசமாக்கலாம்."
பொதுவாகவே சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதா?"உடல் பருமனைப் போலவே, கர்ப்ப காலத்திலும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம் அடிவயிற்றில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தமே ஆகும். அதிர்ஷ்டவசமாக, குழந்தை பிறந்த பிறகு இந்தப் பிரச்னை சரியாகிவிடும்," என்று மருத்துவர் வுட்லேண்ட் கூறுகிறார்.
"வயது அதிகரிக்கும் போது ஆசிட் ரிஃப்ளக்ஸ் சற்று பொதுவான ஒன்றாக மாறுகிறது, ஆனால் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும், காலப்போக்கில் 'ஹையாட்டஸ் ஹெர்னியா' (hiatus hernia) எனப்படும் குடலிறக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம், இது நிச்சயமாக ஆசிட் ரிஃப்ளக்ஸை அதிகப்படுத்தும். இது வயிற்றின் ஒரு சிறிய பகுதி உதரவிதானத்தின் (diaphragm) வழியாக மார்புப் பகுதிக்குள் நழுவிச் செல்லும் நிலையாகும். இது அமிலத்தை உணவுப் பாதைக்குள் செல்லவிடாமல் தடுக்கும் அரணின் வலிமையைப் பெருமளவு குறைத்துவிடுகிறது."
ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது ஒரு பொதுவான பிரச்னையாக இருந்தாலும், புதிய அறிகுறிகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கென்னடி எச்சரிக்கிறார்.
"55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிதாக ஆசிட் ரிஃப்ளக்ஸ் அறிகுறிகள் தோன்றினால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அது மிகவும் தீவிரமான ஏதேனும் ஒரு பாதிப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதால், உடனடியாக ஒரு பொது மருத்துவரை அணுகுவது அவசியம்."
ஆனால், "பலருக்கு எப்போதாவது ஏற்படும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் அறிகுறிகள் பொதுவானது தான். அதற்காகப் பயப்படவோ அல்லது வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்களைச் செய்யவோ தேவையில்லை. ஆனால், அது உங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் அளவுக்குத் தொடர்ச்சியாக ஏற்படும்போது மட்டுமே கூடுதல் கவனம் தேவை," என்று வுட்லேண்ட் விளக்குகிறார்.
"மிக முக்கியமாக, உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் எடையைக் குறைக்க முயலுங்கள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை நிறுத்துங்கள். மற்றபடி, இப்பிரச்னையைத் தூண்டும் உணவுகள் மற்றும் பானங்களை (குறிப்பாக மதுபானம்) அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள். அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்கவும், குறிப்பாகத் தூங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டாம். முடிந்தவரை இரவு உணவிற்கும் தூங்கச் செல்வதற்கும் இடையே 3 முதல் 4 மணி நேர இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்."
பொறுப்புத் துறப்பு (Disclaimer):
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் மருத்துவ ஆலோசனையாகக் கருதப்படக் கூடாது. உங்களது அறிகுறிகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், ஒரு மருத்துவ நிபுணரை அணுகவும்.
மருத்துவர் கென்னடி இது குறித்து விளக்குகையில், "கணிசமான அளவில் உடல் எடை குறைதல் அல்லது நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற மேல் இரைப்பை குடல் தொடர்பான புதிய அறிகுறிகள் தோன்றுதல், விழுங்குவதில் சிரமம் (Dysphagia), உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போல் உணர்வது, அதிகப்படியான ஏப்பம் மற்றும் சாப்பிடும்போது மிக விரைவாக வயிறு நிறைந்த உணர்வு போன்ற செரிமானக் கோளாறு குறித்த அறிகுறிகள் இருந்தால், அவர்கள் உடனடியாகத் தங்கள் பொது மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.
ஏனெனில், சில சந்தர்ப்பங்களில் இவை மிகவும் தீவிரமான பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம்," என்று குறிப்பிட்டார்.
இச்செய்தி முதலில் ஏப்ரல் 2024 இல் வெளியிடப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு