கிரெட்டா முதல் டெஸ்லா வரை…. 2025ல் அறிமுகமான 5 எலக்ட்ரிக் கார்கள் இதோ
TV9 Tamil News December 20, 2025 03:48 AM

எலக்ட்ரிக் கார்களைப் (Electric Cars) பொறுத்தவரை 2025 ஆம் ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு, பல பெரிய நிறுவனங்கள் புதிய மற்றும் மேம்பட்ட எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தின, சிறந்த வசதி, சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் அதிரடி விலை குறைப்பு ஆகியவை சேர்ந்து இந்த ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரி கார்களை வாங்குவதற்கு சிறந்த வாய்ப்பை வழங்கின. கூடுதலாக ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பினால் கார்களின் விலை குறைந்ததால் கார்களின் விற்பனையும் அதிகரித்தது.

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், எலக்ட்ரிக் கார்களுக்கான தேவையும் வேகமாக அதிகரித்துள்ளது. இந்த கட்டுரையின் மூலம், 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க : சற்று ஆறுதல் அளித்த தங்கம்.. மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது!

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இது இரண்டு பேட்டரி ஆப்சன்களுடன் வருகிறது: 42 kWh மற்றும் 51.4 kWh கொண்ட இரண்டு பேட்டரிகள், தோராயமாக 390 கிமீ மற்றும் 470 கிமீ வரம்பை வழங்குகிறது. இந்த எஸ்யூவி வகையிலான கார், வேகமான சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது, மேலும் அதன் கேபினில் 10.25-இன்ச் திரைகள், காற்றோட்டமான இருக்கைகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS போன்ற பிரீமியம் அம்சங்கள் உள்ளன. இதன் விலை ரூ.18 முதல் 20 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டாடா ஹாரியர்

டாடா ஹாரியர் எலக்ட்ரிக் கார் கடந்த ஜூன் 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் டாடா நிறுவனத்தின் மிகவும் பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி காராகக் கருதப்படுகிறது. இது 65 kWh மற்றும் 75 kWh பேட்டரி பேக் ஆப்சன்களுடன் வருகிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 முதல் 600 கிமீ வரை இயக்க முடியும். இதன் இரட்டை மோட்டார் ஆல்-வீல் டிரைவ் அமைப்பு,  ஆஃப் ரோடிங்கையும் சாத்தியமாக்குகிறது. இதன் அம்சங்களில் பனோரமிக் சன்ரூஃப், ஒரு பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் வலுவான பாதுகாப்பு அம்சங்கள்  இதன் சிறப்பம்சங்களாகும். இதன் விலை ரூ.21 லட்சம் முதல் 30 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

மஹிந்திரா XEV 9e

மஹிந்திரா XEV 9e என்பது நிறுவனத்தின் பார்ன் எலக்ட்ரிக் வரம்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கூபே பாணியிலான  எலக்ட்ரிக் எஸ்யுவி காராகும். இது 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி  ஆப்சன்களுடன் வருகிறது, இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 முதல் 650 கிமீ வரை செல்லும் என்று கூறப்படுகிறது. இதன் ஸ்போர்ட்டி வடிவமைப்பு, வேகமான பிக்கப் மற்றும் பிரீமியம் உட்புற டிசைன் இளைஞர்களிடையே பிரபலமான தேர்வாக அமைகிறது.

ADAS, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் ஒலி அமைப்பு போன்ற அம்சங்கள் இதில் அடங்கும். இதன் விலை ரூ. 20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் 7 சீட்டர் பதிப்பு குடும்பமாக பயணிப்பதற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

இதையும் படிக்க : Year Ender 2025: ஒரே ஆப்பில் அனைத்து ரயில் சேவைகள் – ரயில் ஒன் செயலியின் ஸ்பெஷல் என்ன?

கியா கேரன்ஸ் கிளாவிஸ்

கியா கேரன்ஸ் கிளாவிஸ் எலக்ட்ரிக் கார் கடந்த ஜூலை 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் எம்பிவிகளில் ஒன்றாகும். இது 42 kWh மற்றும் 51 kWh பேட்டரி ஆப்சன்களுடன் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 முதல் 490 கிமீ வரை பயணிக்கலாம். இதன் 7 இருக்கைகள் கொண்ட அமைப்பு, குடும்பத்திற்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் வசதியான கேபின் ஆகியவை இதை தனித்துவமாக்குகின்றன. இதன் விலை ரூ.16 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

டெஸ்லா மாடல்

அமெரிக்க எலக்ட்ரிக் பிராண்ட் டெஸ்லா மாடல் Y உடன் இந்திய சந்தையில் நுழைந்துள்ளது. இந்த கார் அதன் வடிவமைப்பு, மேம்பட்ட மென்பொருள் மற்றும் சிறந்த செயல்திறனுக்காக மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது.  ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 400 முதல் 500 கிமீ வரை பயணிக்க முடியும்.  இது அன்றாட பயன்பாட்டிற்கும் நீண்ட பயணங்களுக்கும் ஏற்றதாக அமைகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.