கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் அவசியம் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இதனை முன்வைத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விரிவாக விசாரித்த ஐகோர்ட்டு, அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, அரசியல் நிகழ்ச்சிகளுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்தது. இந்த வரைவு விதிமுறைகள் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், அரசு வகுத்துள்ள நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஜனநாயக அடிப்படைகளுக்கு எதிரானவை எனக் கூறி, அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய இரு அரசியல் கட்சிகளும் தனித்தனியாக பதில் மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெஞ்ச், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.இந்த நிலையில், அரசியல் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான முக்கிய தீர்ப்பை, இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் அறிவிக்கவுள்ளனர்.