குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு; சபாநாயகர் ஓம்பிர்லாவின் தேநீர் விருந்தில், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடிய பிரியங்கா காந்தி..!
Seithipunal Tamil December 20, 2025 04:48 AM

பராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தேநீர் விருந்தளித்தார். இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் காங்கிரஸ் எம்பி பிரியங்கா  கலந்துரையாடியுள்ளார்.

கடந்த டிசம்பர் 01ந் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 19) நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதோடு, காப்பீடு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, 'விபி ஜி ராம் ஜி' மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடங்கிய போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடபட்ட நிலையில், பின்னர் விவாதத்தில் அக்கட்சிகள் பங்கேற்றன.

ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும் போதும், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா எம்பிக்களுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கமாகும். அதன்படி, இன்றும் ஓம்பிர்லா தேநீர் விருந்து அளித்தார். 

கடந்த முறை போல் அல்லாமல் இந்த முறை எதிர்க்கட்சி எம்பிக்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அருகே காங்கிரஸ் எம்பி பிரியங்கா அமர்ந்திருந்தார். விருந்தில், சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது, எம்பிக்களிடம் பிரியங்கா பேசும் போது தனக்கு உடலில் உள்ள அலர்ஜிக்காக தனது தொகுதியான வயநாட்டில் இருந்து வரும் மூலிமை மருந்தை எடுத்துக் கொள்வதாக கூறிய போது, அதனை, பிரதமர் மோடியும், ராஜ்நாத்தும் சிரித்தபடி கவனித்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் பயணம் குறித்து மோடியிடம் பிரியங்கா கேட்டதற்கு, அதற்கு மோடி, பயணம் சிறப்பாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

அப்போது, பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க முன்னேற்பாடுகளுடன் வந்த கொல்லம் தொகுதி எம்பி என்கே பிரேமசந்திரனை பிரதமர் மோடி பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில எம்பிக்கள், மோடியிடம் பழைய பாராளுமன்றத்தில் உள்ளது போன்று பழைய மற்றும் இன்னாள் எம்பிக்கள் கலந்துரையாடும் மைய மண்டபம் உள்ளது போல் புதிய பாராளுமன்றத்திலும் தேவை என்று தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மோடி ' அந்த மண்டபம் ஓய்வு பெற்றவர்களுக்கானது. நீங்கள் இன்னும் சேவை செய்ய வேண்டியுள்ளது ' எனக்கூறினார். அதற்கு எம்பிக்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.