பிரான்ஸின் பெசான்கான் நகரைச் சேர்ந்த அனஸ்தீசியா நிபுணர் டாக்டர் பிரடெரிக் பெஷியர் (53), நோயாளிகளை மயக்க மருந்து என்ற பெயரில் பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசி செலுத்தி மரணத்தின் விளிம்பிற்கு தள்ளியதாக குற்றச்சாட்டுக்குள்ளானார்.
இந்த கொடூர சம்பவங்கள் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்த விசாரணையின் போது, அதிர்ச்சியை ஏற்படுத்தும் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்தன. அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து அளிக்கும் தருணங்களில், நோயாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தி, திட்டமிட்ட முறையில் மாரடைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பின்னர், திடீர் அவசர நிலை என நாடகமாடி, அதே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, ‘உயிர் காப்பாற்றிய நாயகன்’ போல தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார்.இந்த அபாயகரமான விளையாட்டு 2008 முதல் 2021 வரை நீடித்ததாகவும், அந்த காலகட்டத்தில் மொத்தம் 30 நோயாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதில், 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.இந்த மனிதாபிமானமற்ற குற்றங்களை கருத்தில் கொண்டு, வேண்டுமென்றே விஷ ஊசி செலுத்தி 12 பேரின் உயிரைப் பறித்த குற்றத்திற்காக, டாக்டர் பிரடெரிக் பெஷியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், மருத்துவ சேவையின் பெயரில் மரணத்தை விளைத்த இந்த வழக்கு, உலகளாவிய அளவில் மருத்துவ நெறிமுறைகள் குறித்து கடும் விவாதத்தை எழுப்பியுள்ளது.