தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச்செயலாளர் செந்தில் நாதனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பெண் நிர்வாகி வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக சர்ச்சை வீடியோ வெளியாகிய நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட த.வெ.க செயலாளர் செந்தில்நாதன் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதாவது தவெக கட்சியின் மகளிர் அணி நிர்வாகியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன்காரணமாக அவர் மீது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கு எந்த விதமான வகையிலும் களங்கத்தை விளைவிக்கும் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட த.வெ.க செயலாளராக இருந்தவர் ஜே.ஜே. செந்தில்நாதன். ராசிபுரம் பகுதியில் வசித்து வரும் இவர் நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்திற்கு தலைவராக இருந்துள்ளார். பின்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.