தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுபவர்கள் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிடும் இந்த (திமுக) மக்கள் விரோத அரசை இனி எதிர்க்க முடியாது என நம்பிக்கையிழக்கும் சாமானியர்கள், தற்கொலையைத் துணையாக நாடுவது மனித இனத்திற்கே ஆபத்தானது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது;
''கடந்த 05 மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியால் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட ரவிக்குமார் என்ற தூய்மைப் பணியாளர், மிகுந்த மன உளைச்சலின் காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது.
உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளும் அரசின் அலட்சியத்தாலும், ஆணவத்தாலும் பல அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவது நெஞ்சை கனக்கச் செய்கிறது.
தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுபவர்கள் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிடும் இந்த மக்கள் விரோத அரசை இனி எதிர்க்க முடியாது என நம்பிக்கையிழக்கும் சாமானியர்கள், தற்கொலையைத் துணையாக நாடுவது மனித இனத்திற்கே ஆபத்தானது.
தமிழகத்தையும் தமிழக மக்களையும் அழிவின் விளிம்பை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் அறிவாலயம் எனும் நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது.'' என்று நயினார் நாகேந்திரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.