ரிஸ்டா மாடலின் வெற்றியைத் தொடர்ந்து, ஏதர் எனர்ஜி குறைந்த விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. EL01 என்ற கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த புதிய ஸ்கூட்டர், மலிவான விலையில் அதிக வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஓலா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு நேரடியாக சவாலாக இந்த மாடல் அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 450 சீரீஸ் மற்றும் குடும்ப பயன்பாட்டுக்கான ரிஸ்டா மாடல் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஏதர், தற்போது அதைவிட குறைந்த விலை மாடல் மூலம் தனது மார்க்கெட் ஷேரை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டருக்கான வடிவமைப்பு காப்புரிமையை ஏதர் இந்தியாவில் பதிவு செய்துள்ளது. 2025ல் நடைபெற்ற Ather Community Day நிகழ்ச்சியில் EL01 கான்செப்டும், புதிய EL பிளாட்ஃபாரமும் அறிமுகம் செய்யப்பட்டது.
வடிவமைப்பில், இந்த ஸ்கூட்டர் ரிஸ்டாவை நினைவூட்டும் எளிமையான தோற்றத்துடன் இருக்கும். LED ஹெட்லெம்ப், முன்புற மெல்லிய LED DRL, எளிய பாடி பேனல்கள், ஒற்றை இருக்கை, பில்லியன் பேக்ரெஸ்ட் மற்றும் முன்புற ஏப்ரனில் இணைக்கப்பட்ட இன்டிகேட்டர்கள் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. தரையில் பொருத்தப்படும் பேட்டரி அமைப்புடன், 2 kWh முதல் 5 kWh வரை பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். ஒரே சார்ஜில் சுமார் 150 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த குறைந்த விலை ஏதர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2026ல் சந்தையில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாடல் மூலம் ஏதர், முதல் முறையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களையும் பெருமளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.