அரசு மினி பேருந்தில் 7ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நடத்துநர்
Top Tamil News December 21, 2025 01:48 PM

வளசரவாக்கத்தில் அரசு மினி பேருந்தில் 7ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நடத்துநரை கைது செய்ய வலியுறுத்தி, ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வளசரவாக்கம் அருகே 19ஆம் தேதி காலை அரசு மினி பேருந்தில் 7ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்றுள்ளார். அவரிடம் பேருந்து நடத்துநர் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டதாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பேருந்தில் மாணவி பயணித்தபோது நடத்துநர் அநாகரீக வகையில் சைகை செய்ததாகவும், பின்னர் பாலியல் ரீதியில் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நடத்துநரை கைது செய்யவில்லை எனக்கூறி மாணவியின் பெற்றோருடன் இணைந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்நிலையத்தின் முன்பு அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார், நாளைய தினத்திற்குள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நடத்துநர் கைது செய்யப்படுவார் என உறுதியளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாதர் சங்க நிர்வாகி சித்ரகலா, நாளைய தினத்திற்குள் கைது செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.