ஜன நாயகனுக்கு போட்டியாக பராசக்தி: மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி!என்னென்ன பண்றாங்க பாருங்க..!
Seithipunal Tamil December 21, 2025 03:48 PM

நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படம் ஜனவரி 9-ம் தேதியும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் ஜனவரி 14-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த ரிலீஸ் தேதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, பராசக்தி படத்தை ஜனவரி 10-ம் தேதி ஜன நாயகனுக்கு நேரடி போட்டியாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் – சிவகார்த்திகேயன் படங்கள் மோதும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே இருந்தது. ஆனால் இரண்டு படங்களுக்கும் இடையே சில நாட்கள் இடைவெளி இருப்பதால் நேரடி மோதல் இல்லை என்ற நிலை இருந்தது. இந்நிலையில், அந்த கணக்கு தற்போது மாறக்கூடும் என்கிறார்கள்.

பராசக்தி படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது என்பதும், அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், பராசக்தி ஜன நாயகனுக்கு போட்டியாக வெளியானால், முக்கியமான பெரிய திரையரங்குகள் பராசக்தி வசம் செல்ல வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஜன நாயகன் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில், விஜய் சமீப காலமாக திமுகவை கடுமையாக விமர்சித்து வருவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய், திமுகவை “தீய சக்தி” என விமர்சித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பராசக்தி படத்தை உடனடியாக போட்டிக்கு நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக வலைப்பேச்சு குழு தகவல் வெளியிட்டுள்ளது. பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்பதும் இந்த பேச்சுக்கு வலு சேர்க்கிறது.

மேலும், ஜனவரி மூன்றாவது வாரத்தில் அஜித் நடித்த மங்காத்தா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டமும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக பொங்கல் ரிலீஸ் படங்கள் குறைந்தது மூன்று வாரங்கள் திரையரங்குகளில் நிலைத்து நிற்கும் நிலையில், ஜன நாயகனுக்கு அதிக திரையரங்குகள் கிடைக்காமல் தடுப்பதற்காக, பொங்கலுக்கு முன் பராசக்தியும், பொங்கலுக்குப் பின் மங்காத்தாவும் களமிறக்கப்படலாம் என்ற பேச்சு சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது.

இந்த அனைத்து தடைகளையும் தாண்டி, விஜய்யின் கடைசி படமாக கூறப்படும் ஜன நாயகன் வசூல் சாதனை படைக்குமா என்பதே தற்போது ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.