பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள கொம்புசீவி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அதிக ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்த நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியன், தனது தந்தையின் வழியில் நடிகராக அறிமுகமானாலும், கடந்த பத்து ஆண்டுகளாக பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவரது திரையுலக பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் சினிமாவை நோக்கி கவனம் செலுத்திய சண்முக பாண்டியன், இந்த ஆண்டு ஜூன் மாதம் படைத்தலைவன் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
அதனைத் தொடர்ந்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி படத்தில் நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் இன்று வெளியானது.
படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஒரு ரசிகர், “வழக்கமான கதைக்களத்தை பொன்ராம் தனது பாணியில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். சண்முக பாண்டியன் முந்தைய படங்களை விட நல்ல தேர்ச்சியுடன் நடித்துள்ளார். ஆக்சன் காட்சிகள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற அளவுக்கு இருக்கிறது. சரத்குமார் படத்திற்கு பெரிய பலம். யுவன் இசை படத்திற்கு மிகப்பெரிய பக்க பலம். முதல் பாதி ஓரளவு ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் தடுமாற்றம் தெரிகிறது. லாஜிக் மறந்து ஒருமுறை பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு ரசிகர், “கொம்புசீவி பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர். சண்முக பாண்டியனுக்கு முதல் சூப்பர் ஹிட் கிடைத்திருக்கிறது. சரத்குமார் தொடர்ந்து தனித்துவமான கதாபாத்திரங்களில் அசத்துகிறார்” என்று பாராட்டியுள்ளார். மேலும் சில ரசிகர்கள், முதல் நாள் முதல் காட்சி நல்ல ஆரம்பத்தை பெற்றதாகவும், முதல் பாதி நன்றாக கிளிக் ஆனதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தத்தில், கொம்புசீவி படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பெரும்பாலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸுடன் திரையரங்குகளில் ஓடத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.