இந்தியன் ரயில்வே வரும் டிசம்பர் 26 முதல் ரயில் பயண கட்டணங்களை உயர்த்துகிறது. நீண்ட தூர பயணங்களுக்கான கட்டணம் இதன் மூலம் அதிகரிக்கவுள்ளது. எனினும், புறநகர் ரயில் பயண கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
சாதாரண வகுப்பில் 215 கி.மீ வரையிலான தூரத்திற்கு பழைய கட்டணமே தொடரும். 215 கி.மீ-க்கு மேல் கிலோமீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்படுகிறது. விரைவு ரயில்களில் ஏசி அல்லாத மற்றும் ஏசி பெட்டிகள் இரண்டிற்கும் கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 500 கி.மீ தூர பயணத்திற்கு இனி 10 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.
ரயில்வேயின் மனிதவள செலவு ரூ. 1.15 லட்சம் கோடியாகவும், ஓய்வூதிய செலவு ரூ. 60,000 கோடியாகவும் உயர்ந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் மொத்த இயக்கச் செலவு ரூ. 2.63 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதால், இந்த நிதி சுமையைச் சமாளிக்க கட்டண உயர்வு அவசியமாகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 600 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட ரயில்வே திட்டமிட்டுள்ளது.
Edited by Siva