தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், நெல்லை பொருநை அருங்காட்சியகத்தை தமிழினத்தின் பெருமை பேசும் பண்பாட்டுச் சின்னமாகப் புகழ்ந்து உருக்கமான வார்த்தைகளில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,"தமிழினத்தின் தொன்மையும் பெருமையும் ஒளிவீசும் அடையாளமாக நெல்லை பொருநை அருங்காட்சியகம் திகழ்கிறது. இதனை காண்போரின் கண்கள் விரிந்து வியக்கின்றன; தமிழர்களின் நாகரிக உயரத்தை உணர்ந்து மனம் பெருமிதம் கொள்கிறது.

மரபும் நவீனமும் ஒன்றிணைந்து கைகோர்த்து நிற்கும் வரலாற்றுச் சின்னமாக, திராவிட மாடல் அரசு கட்டியெழுப்பிய இந்த அருங்காட்சியகம், உலகத் தமிழர்கள் அனைவரும் தவறாமல் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலமாகும்.
வரலாற்றை அறிந்தவர்களே எதிர்கால வரலாற்றை உருவாக்க முடியும். பழம்பெருமையில் மட்டும் திளைக்காமல், அதிலிருந்து ஊக்கம் பெற்று ‘முன் செல்லடா’ என நம்மை தொடர்ந்து முன்னேற்றும் சக்தியாக பொருநை அருங்காட்சியகம் விளங்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இதனை தமிழ்நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளேன்" என தனது பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.