விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வரும் நிலையில், வறண்ட செவ்வாய் கிரகம் ஒருவேளை பூமியைப் போல பசுமையாக மாறினால் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் தத்ரூபமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவப்பு கோளான செவ்வாயில் தற்போது வெறும் பாறைகளும், கரடுமுரடான நிலப்பரப்புகளும் மட்டுமே உள்ள நிலையில், இந்த வீடியோவில் சில நொடிகளிலேயே அந்த நிலப்பரப்பு முழுவதும் அடர்ந்த காடுகளாகவும், வற்றாத நதிகள் ஓடும் பசுமைப் பிரதேசமாகவும் உருமாறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
எக்ஸ் தளத்தின் குரோக் இமேஜின் எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த 6 வினாடி வீடியோ, சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “ஒரு நாள் செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழும் இடமாக மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த இணையவாசிகள், இது நமது வாழ்நாளில் நடக்குமா என்று தெரியவில்லை என்றாலும், எதிர்கால சந்ததியினர் செவ்வாயில் மரங்களுக்கும் செடிகளுக்கும் இடையே வாழ்வதைக் கற்பனை செய்து பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் செவ்வாயில் பூமியைப் போன்ற வளிமண்டலம் இல்லை என்றாலும், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நீர் இருந்ததாக நம்பப்படுவதால், இதுபோன்ற ஏஐ காட்சிகள் எதிர்கால அறிவியலின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளன.