சென்னை, டிசம்பர் 21, 2025: டிசம்பர் 21, 2025 தேதியான இன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கியமாக வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில், அரசியல் கட்சிகள் சார்பில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்:2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றன. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19, 2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க:ஜென் Z தலைமுறை இதனை தெரிந்துகொள்ள வேண்டும்…. – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தேர்தல் ஆணையம் தரப்பில் இரட்டை வாக்குரிமை உள்ளவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், படிவம் பெற்று நிரப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் மாலை 6 மணி அளவில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும். மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: டிக்கெட் இல்லாமல் ராமேஸ்வரம் வந்த 80 வட மாநில பயணிகள் – ரூ.24,000 அபராதம் விதிப்பு
ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?வரைவு வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் இது தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏதுவாக அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைப்பது தொடர்பாகவும், படிவங்களை பூர்த்தி செய்வதில் மக்களுக்கு உதவிகரமாக இருக்க நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தொகுதி வாரியாக நிலவரங்கள் எவ்வாறு உள்ளன, பலவீனமான தொகுதிகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், மாவட்டச் செயலாளர்கள் களப்பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.