இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி டிசம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்றது. தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2–1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்த நிலையில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 73 ரன்களும், ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் அரைசதம் உட்பட 63 ரன்களும் விளாசினர். சஞ்சு சாம்சன் 37, அபிஷேக் சர்மா 34 ரன்கள் சேர்த்தனர். ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்காக இரண்டாவது வேகமான டி20 அரைசதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் கோர்பின் போஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் துணைக் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விலகியதால், சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திய சாம்சன், பவர்பிளேவில் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 37 ரன்களை 168 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார்.
இதையடுத்து நேரலை வர்ணனையில் பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “இவரையா பெஞ்சில் அமர வைத்தீர்கள்?” என கௌதம் கம்பீரை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், மிடில் ஆர்டரில் அல்லாமல் சுப்மன் கில்லுக்கு பதிலாக சாம்சனை ஓப்பனிங்கில் விளையாட வைப்பதே இந்திய அணிக்கு சிறந்த தொடக்கத்தை தரும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடும்போது சாம்சன் மிகவும் ஆபத்தான வீரர் என்றும், ஏற்கனவே மூன்று சதங்கள் அடித்துள்ளதை நினைவூட்டிய சாஸ்திரி, இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் அவரது இடம் குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளார்.