சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் பொதுச் சாலைகளில் ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட் செய்வது தற்போது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், ஹைவேயில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய ட்ரக்கிற்கு மிக அருகில், ஒரு இளைஞர் தனது பைக்கை வளைத்து வளைத்து ‘லெஹரியா கட்’ அடித்து ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரக்கிற்கும் பைக்கிற்கும் இடையே மிகக் குறைந்த இடைவெளியே இருந்த நிலையில், ஒரு சிறு தவறு நடந்திருந்தால் கூட அந்த இளைஞர் ட்ரக்கின் சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் இருந்தது.
இந்த ஆபத்தான விளையாட்டை அந்த இளைஞர் மட்டும் செய்யாமல், அவருக்குப் பின்னால் வந்த மேலும் மூன்று பைக்கர்களும் அதேபோலப் போட்டியிட்டுச் சென்றது இன்னும் பதற வைக்கிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இதுபோன்ற விபத்துகளில் பைக் ஓட்டுபவர்கள் உயிரிழந்தால் உடனே போலீஸார் லாரி டிரைவரைத் தான் கைது செய்வார்கள், ஆனால் இந்த முறை டிரைவரே வீடியோ எடுத்து உண்மையை நிரூபித்துவிட்டார்” என ஆவேசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
“சாகசம் என்ற பெயரில் மற்றவர்களின் உயிரையும் பணயம் வைக்கும் இவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.