அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில் கேட்ஸ், அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச தொழில்மாநாட்டில் பங்கேற்று முக்கிய உரையாற்றினார்.
அப்போது அவர் செயற்கை நுண்ணறிவு (AI) துறையைச் சுற்றியுள்ள முதலீட்டு ஆர்வம் குறித்து கூர்மையான எச்சரிக்கையை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,“இன்றைய சூழலில் செயற்கை நுண்ணறிவு துறை மிகுந்த போட்டி நிறைந்ததாக வளர்ந்துள்ளது. ஆனால் இந்த வேகம் மற்றும் உற்சாகம் நீண்ட காலம் தொடருமா என்றால், அதற்கு என் பதில் ‘இல்லை’. ஏ.ஐ. தற்போது ஒரு நீர்க்குமிழி (Bubble) போன்று உருவெடுத்து வருகிறது.
இதில் முதலீடு செய்த அனைத்து நிறுவனங்களும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை யதார்த்தமல்ல. எனவே முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெரும் சரிவை எதிர்கொள்ள மனதளவில் தயாராக இருக்க வேண்டும்” என பில் கேட்ஸ் தெரிவித்தார்.
இந்த கருத்துகள், ஏ.ஐ. துறையில் கண்மூடித்தனமான முதலீடுகள் குறித்து உலகளவில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.