ரயில்வே கட்டணங்கள் உயருகிறதா? டிசம்பர் 26ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறதா?
ET Tamil December 22, 2025 01:48 AM
இந்திய ரயில்வே தனது பயணிகள் கட்டணக் கட்டமைப்பை டிசம்பர் 26ம் தேதி முதல் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் புறநகர் ரயில் கட்டணங்கள், குறுகிய தூர ரயில் கட்டணங்கள் உயர்த்த வாய்ப்பில்லை. அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்ட தூரப் பயணப் பிரிவுகளுக்குச் சிறிய அளவிலான கட்டண உயர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புறநகர் ரயில் சேவைகள் மற்றும் மாதாந்திர பயண சீசன் டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களில் எந்த கட்டண உயர்வும் இருக்காது என ரயில்வே துறை தெளிவுப்படுத்தியுள்ளது. 215 கிலோமீட்டர் வரையிலான தூரங்களுக்கான சாதாரண வகுப்புப் பயணக் கட்டணங்களிலும் எந்த மாற்றமும் இருக்காது.
நீண்ட தூரப் பயணங்களுக்குக் குறைந்தபட்ச உயர்வு
215 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள சாதாரண வகுப்புப் பயணங்களுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கட்டணம் உயரும். மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி அல்லாத பிரிவுகளில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்வு இருக்கும். அதே நேரத்தில் ஏசி வகுப்பு கட்டணங்களும் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா உயரும்.
இந்த கட்டண உயர்வினால் பயணிகலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத பெட்டிகளில் 500 கிலோமீட்டர் பயணத்திற்கு, பயணிகள் கூடுதலாக ரூ. 10 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
வருவாய் தாக்கம் மற்றும் செலவு அழுத்தங்கள்
இந்த கட்டணச் சீரமைப்பு காரணமாக இந்திய ரயில்வே நடப்பு ஆண்டில் சுமார் ரூ.600 கோடி வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் தனது வலையமைப்பு மற்றும் செயல்பாடுகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. உயர் செயல்பாட்டு நிலைகளை ஆதரிக்கவும் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்தவும், அது தனது மனிதவளத்தை அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, மனிதவளச் செலவுகள் ரூ. 1.15 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஓய்வூதியச் செலவுகள் ரூ.600 பில்லியனாக அதிகரித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் மொத்த செயல்பாட்டுச் செலவு ரூ. 2.63 டிரில்லியனாக உயர்ந்துள்ளது.
செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் கவனம்
அதிகரித்த மனிதவளச் செலவுகளைச் சமாளிக்க, பயணிகள் கட்டணங்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சீரமைப்பதோடு, சரக்கு ஏற்றுதலை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துவதாக ரயில்வே கூறியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளுக்கான தொடர்ச்சியான முயற்சிகள் பலனளித்துள்ளதாகவும், இந்தியா இப்போது உலகின் இரண்டாவது பெரிய சரக்கு ஏற்றிச் செல்லும் ரயில்வே வலையமைப்பாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய பண்டிகைக் காலத்தில் 12,000-க்கும் மேற்பட்ட ரயில்களை வெற்றிகரமாக இயக்கியது. மேம்பட்ட செயல்பாட்டுத் திறனுக்கு ஒரு உதாரணமாகக் குறிப்பிடப்பட்டது.
சமூகக் கடமைகளை நிறைவேற்றும் அதே வேளையில், செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் செலவுக் கட்டுப்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று ரயில்வே கூறியுள்ளது.