BBC தர்லுவாடா கிராமம்
ஆந்திரப் பிரதேசத்தில் அனகப்பள்ளி-ராய்ப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் தர்லுவாடா. விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமம் சமீபகாலம் வரை விசாகப்பட்டினம் மக்களுக்கு கூட அதிகம் பரிச்சயமில்லாத ஒன்று. ஆனால் இப்போது நாடு முழுவதும் இந்தக் கிராமத்தைப் பற்றிப் பேசப்படுகிறது.
தர்லுவாடாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூபாய் 1.35 லட்சம் கோடி) முதலீடு செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்த மிகப்பெரிய முதலீட்டில் இங்கு ஒரு ஏஐ (AI) தரவு மையத்தை அமைக்கும். இதற்கான பணிகளை 2026-ஆம் ஆண்டில் தொடங்கி 2030-ஆம் ஆண்டுக்குள் தரவு மையத்தைத் தயார் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், இந்த தரவு மையத்தை நிறுவுவது தொடர்பாக கிராமத்தில் ஒரு கலவையான சூழல் நிலவுகிறது. ஒருபுறம், மகிழ்ச்சியும் மறுபுறம், கவலையும் தென்படுகிறது. நீர் நுகர்வு மற்றும் மாசுபாடு குறித்த கவலை தங்களுக்கு உள்ளதாக சில கிராமவாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தவிர்க்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகம் சார்ந்திருப்போம் என கூகுள் நிறுவனம் கூறுகிறது.
BBC தர்லுவாடா கிராமம் தர்லுவாடா எங்கே இருக்கிறது?
இந்த கிராமத்தை விசாகப்பட்டினத்திலிருந்து ஆனந்தபுரம், அடவிவரம் மற்றும் பெண்டுர்த்தி வழியாக அடையலாம். விசாகப்பட்டினத்திலிருந்து, தர்லுவாடா 39 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
நகரத்திற்கு அருகில் இருந்தாலும் கூட, இந்த கிராமத்திற்குள் நீங்கள் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்து, எங்கு பார்த்தாலும் ஒரு வழக்கமான கிராமப்புறச் சூழலே நிலவுவதை நீங்கள் காண்பீர்கள்.
தேசிய நெடுஞ்சாலையை அடுத்துள்ள சாலையிலிருந்து கிராமத்திற்குள் நுழையும்போது மா, முந்திரி தோட்டங்கள், வயல்களையும், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வேலையில் மும்முரமாக இருப்பதையும் காணலாம்.
கூகுள் தரவு மைய அறிவிப்பு காரணமாக, புதிய நபர்களின் வருகைக்கு பழகிவிட்ட கிராமவாசிகள், குறைந்தபட்சம் அவர்களிடம் 'நீங்கள் யார்?' என்று கூட கேட்பதில்லை.
"ஆமாம், எங்கள் கிராமத்திற்கு ஒரு பெரிய நிறுவனம் வருகிறது. ஆனால் எல்லோரும் அதைப் பற்றி வெவ்வேறு விஷயங்களைச் சொல்கிறார்கள். உண்மை என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை," என்று தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த விவசாயி கிருஷ்ணா பிபிசியிடம் கூறினார்.
இது குறித்து கேட்டபோது, லட்சுமம்மா என்ற பெண், "எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு நிறுவனம் வருவதாகச் சொல்கிறார்கள், கூகுள் என நினைக்கிறேன" என்றார்.
சுமார் 3,500 பேர் வாழும் இந்த கிராமத்தில் பலருக்கு 'கூகுள்' என்ற பெயரை உச்சரிப்பதில்கூட சிரமம் உள்ளது. சிலர் இதை குலுகுலே என்றும், மற்றவர்கள் இதை கூகுலே என்றும், இன்னும் சிலர் இதை குலுகு கம்பெனி என்றும் கூறுகிறார்கள். இது அவர்களின் கிராமப்புற வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது.
BBC தர்லுவாடா கிராம சாலை தர்லுவாடாவில் என்ன நடக்கிறது?
ஆந்திர அரசு, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தர்லுவாடாவில் 308 ஏக்கர் நிலத்தையும், அடவிவரத்தில் 120 ஏக்கர் நிலத்தையும், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள ராம்பில்லியில் 160 ஏக்கர் நிலத்தையும் கூகுள் ஏஐ தரவு மையத்திற்காக ஒதுக்கியுள்ளது.
ஆந்திரப் பிரதேச அரசு, கூகுளின் துணை நிறுவனமான ரைடனுக்கு (Ryden) நிலங்களை மாற்றுவதற்கான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அடவிவரம் தர்லுவாடாவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலும், ராம்பில்லி சுமார் 85 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இருப்பினும், அடவிவரம் நிலங்கள் சிம்மாச்சலம் கோயிலுக்குச் சொந்தமானவை என்பதால், அவர்களின் அனுமதி தேவைப்பட்டது. ராம்பில்லி பகுதி கடற்படை தளத்துக்கு அருகில் இருப்பதால், பாதுகாப்பு அனுமதி தேவைப்பட்டது.
கூகுள் தரவு மையத்திற்காக அரசாங்கம் நிலம் ஒதுக்கியுள்ள தர்லுவாடா, ராம்பில்லி மற்றும் அடவிவரம் பகுதிகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அரசாங்கமோ அல்லது கூகுள் நிறுவனமோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தற்போது, அதிகாரிகள் தர்லுவாடாவிற்கு பல முறை வந்து செல்கிறார்கள். கூகுள் தரவு மையத்திற்காக நிலம் ஒதுக்கப்பட்ட பகுதியில் அளவீடு பணிகளை செய்து வருகின்றனர். மேலும், மண் பரிசோதனைகள் மற்றும் காடுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிராமத்தில் உற்சாகமும் சந்தேகமும் கலந்த ஒரு சூழல் நிலவுகிறது.
"கூகுள் தரவு மையம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது எங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் கிராமத்தில் நிலத்தின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இது மகிழ்ச்சியைத் தருகிறது" என்று கிராமவாசி சத்யராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
"கூகுள் போன்ற ஒரு பெரிய நிறுவனம் எங்கள் கிராமத்தில் தனது நிறுவனத்தை அமைப்பது குறித்து முதலில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், 'கூகுள் எங்கள் கிராமத்தில் என்ன மாதிரியான நிறுவனத்தை அமைக்கிறது? அது என்ன மாதிரியான வேலைகளைச் செய்யும்? மாசுபாடு அதிகரிக்குமா? போன்ற கேள்விகள் உள்ளன. அது சில கவலைகளை எழுப்பியுள்ளது," என்று ஐடிஐ படித்து தற்போது தேநீர் கடை நடத்தி வரும் அப்பலராஜு பிபிசியிடம் கூறினார்.
கூகுள் தரவு மையத்தின் வருகையுடன், தர்லுவாடா கிராம மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக தோன்றியது.
தங்கள் கிராமம் ஒரு பெரிய நகரமாக மாறும் என்றும், வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கூகுள் நிறுவனத்தில் வேலைகளைப் பெறுவதற்குத் தேவையான படிப்புகளை படிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
BBC கூகுள் காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிராமம் அமெரிக்கா அல்லது ஹைதராபாத்தின் கோகபேட் பகுதி போல மாறும் என்று கிராம மக்கள் கூறுகிறார்கள்.
தர்லுவாடாவைச் சேர்ந்த எம்.எஸ்சி முடித்த கனிகுமார் என்ற இளைஞர், "கூகுள் எங்கள் கிராமத்தில் ஒரு தரவு மையத்தைத் திறந்து ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்களை நடத்தும் என்றால், அதற்கு தேவையான கோர்ஸ்கள் (Courses) குறித்த விழிப்புணர்வு அளித்தால், அந்தப் பாடத்திட்டத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோம்" என்று கூறினார்.
"உள்ளூர்வாசிகள் என்ற முறையில், நாங்கள் இங்கே கூகுளில் வேலை பெற முடியும்," என்று தர்லுவாடாவில் வசிக்கும் மகேஷ் கூறினார்.
மறுபுறம், கூகுள் தரவு மையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள், அதற்கு ஈடாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் எதிர்காலத்தில் கிராமத்தில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
"அரசாங்கம் ஏக்கருக்கு ரூ.40 லட்சம் ரொக்கம், 20 சென்ட் நில உரிமை, வரவிருக்கும் ஷாப்பிங் மாலில் ஒரு கடை மற்றும் அவுட்சோர்சிங் வேலை ஆகியவற்றை அறிவித்துள்ளது. கூகுள் இங்கு மண் பரிசோதனைகளை நடத்தி வருகிறது. கூகுள் காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் கிராமம் அமெரிக்கா அல்லது ஹைதராபாத்தின் கோகபேட் பகுதி போல மாறும் என்று கூறுகிறார்கள்," என்று கூகுள் தரவு மையத்திற்காக 4 ஏக்கர் நிலத்தை வழங்கிய வெங்கடராஜு பிபிசியிடம் கூறினார்.
"எங்கள் கிராமத்தில் இதுபோன்ற ஒரு சூழலை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று சர்பானந்த பி. நாயுடு பிபிசியிடம் கூறினார்.
BBC தர்லுவாடா இரண்டு மடங்கு உயர்ந்த நிலத்தின் விலை
கிராமவாசி நரசிங்கராவ், கூகுள் தரவு மையம் அமையவிருப்பதாகக் கூறப்படும் மலை உச்சிக்கு பிபிசி குழுவை அழைத்துச் சென்றார். அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். சில கிராமவாசிகள் அருகில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
"இழப்பீடு, அரசாங்கம் வழங்கும் தொகுப்பு, எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் நிலம் கொடுப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிலம் இருந்தால், அது எப்போதும் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து உள்ளது" என்று உள்ளூரில் வசிக்கும் குருமூர்த்தி மற்றும் நரசிம்ம ராவ் தெரிவித்தனர்.
விசாகப்பட்டினத்தில் ரியல் எஸ்டேட் துறை தற்போது தேக்க நிலையில் உள்ளது.
இருப்பினும், தரவு மையத்தின் அறிவிப்பு காரணமாக தர்லுவாடாவில் நிலங்களின் விலை சில நாட்களுக்குள் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. அப்படியிருந்தும், தர்லுவாடா கிராமவாசிகளில் பலர் தங்கள் நிலங்களை விற்கத் தயாராக இல்லை.
"விலை மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் நிலத்தை விற்கவில்லை. தரவு மைய அறிவிப்புக்கு முன்பு ரூ. 3 லட்சம் மதிப்புடைய ஒரு சென்ட் நிலம் இப்போது ஏழு அல்லது எட்டு லட்ச மதிப்புடையதாக உள்ளது," என்று தர்லுவாடா விவசாயி வெங்கட ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் சார்பாக வருகிறோம் என்று கூறிக்கொண்டு சிலர், நில விற்பனை தொடர்பாக தினமும் கிராமத்திற்கு வருவதாக கிராமவாசிகள் கூறினர்.
தரவு மையத்தின் அறிவிப்பு தர்லுவாடாவிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள ரியல் எஸ்டேட் வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ரியல் எஸ்டேட் வணிகர் ஸ்ரீராமராஜு, "விலைகள் 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளன" என்கிறார்.
இருப்பினும், நில விலை உயர்வை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
BBC கூகுள் ஏன் விசாகப்பட்டினத்தைத் தேர்ந்தெடுத்தது?
கூகுள் தரவு மையம் 2030-ஆம் ஆண்டுக்குள் 1.88 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று ஆந்திர அரசு கூறுகிறது. கூகுள் தரவு மையம் கட்டுமானப் பணிகளால் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் இதில் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
விசாகப்பட்டினத்தின் கூகுள் தரவு மையம் 2028-2032-க்கு இடையில் ஆந்திரப் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) ஆண்டுதோறும் ரூ.10,518 கோடி பங்களிக்கும் என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆந்திராவில் ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் வரை நேரடி வேலை வாய்ப்புகளும், 30 ஆயிரம் வரை மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் தெரிவித்தார்.
இருப்பினும், தரவு மையங்களில் நேரடியாக அதிக வேலைகள் இருக்காது என்று ஐடி நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவ்வளவு பெரிய திட்டத்திற்கு கூகுள் ஏன் விசாகப்பட்டினத்தை தேர்ந்தெடுத்தது என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான விவாதம் நடந்து வருகிறது.
"டேட்டா சென்டரை இயக்க விசாகப்பட்டினத்தில் உப்புநீக்கம் (Desalination- கடல் நீரிலிருந்து உப்பு மற்றும் தாதுக்களை அகற்றுவது) என்ற வழி உள்ளது. மேலும், தரைவழி மையங்களுக்குத் தேவையான கேபிள்களை கடலில் அமைப்பதன் மூலம், கேபிள் இறங்கு நிலையங்களுடன் (Cable landing point) இணைக்க விசாகப்பட்டினம் ஒரு சிறந்த இடமாகும். இவை அனைத்தின் காரணமாகவும் கூகுள் விசாகப்பட்டினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது" என்று ஐடி துறை நிபுணரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான பி.எஸ். அவதானி கூறுகிறார்.
BBC தரவு மையத்தில் என்னென்ன வேலைகள் உள்ளன?
தகவல் தொழில்நுட்பத் துறை தொழில் முனைவோரும், விசாகப்பட்டினம் ஐடி சிறப்பு பொருளாதார மண்டலத்தின் துணைத் தலைவருமான ஓ. நரேஷ், தரவு மையங்களில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினார்.
அவரைப் பொறுத்தவரை, இங்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் என்பது,
தொழில்நுட்பப் பணிகள்: தரவு மைய பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், நெட்வொர்க் பொறியாளர்கள், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், செயற்கை நுண்ணறிவு/இயந்திர கற்றல் நிபுணர்கள்.
செயல்பாடுகள் தொடர்பான பணிகள்: மின் பொறியாளர்கள், இயந்திர சேவைகள், பாதுகாப்பு அதிகாரிகள், குளிரூட்டும் அமைப்பிற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள், மின்/ஆற்றல் மேலாண்மை ஊழியர்கள்.
நிர்வாகம் தொடர்பான பணிகள்: நிதி, தளவாடங்கள், திறன் மேம்பாட்டு வேலைகள்.
"ஆனால், இவை லட்சக்கணக்கில் இருக்காது. தரவு மையம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பு, எரிசக்தி வழித்தடங்கள், பேட்டரி சேமிப்பு மையங்கள்…இவை அனைத்தும் வரும்போதுதான் வேலைகள் அதிகரிக்கும். இருப்பினும், இவை அனைத்தும் வர, தேவையான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்," என்று நரேஷ் பிபிசியிடம் கூறினார்.
"ஒரு தரவு மையம் தொடர்ந்து 24/7 இயங்க வேண்டும். இதற்கு நிறைய உள்ளூர் மனிதவளமும் தேவைப்படுகிறது," என்று விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தரவு ஆய்வாளர் சிவாஜி கூறினார்.
BBC கூகுள் தரவு மையம் குறித்த அறிவிப்பால் தர்லுவாடாவில் நிலத்தின் விலை உயர்ந்துள்ளது. மாசுபாடு மற்றும் நீர் பயன்பாடு குறித்த சந்தேகங்கள்
தரவு மையங்கள் அதிக அளவு மின்சாரம் மற்றும் நன்னீரைப் பயன்படுத்துவதாகவும், தரவு மையங்கள் இப்பகுதியில் வெப்பநிலையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூற்றுக்கள் உள்ளன.
"தரவு மையம் வந்தால் நன்றாக இருக்கும், ஆனால்... அது எங்கள் கிராமத்தின் எதிர்காலத்திற்கும் எங்கள் குழந்தைகளுக்கும் தீங்கு விளைவிக்காத வரை," என்று கிராமவாசி நரசிங்கராவ் பிபிசியிடம் கூறினார்.
பிபிசி கூகுள் நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் பதில் கேட்டபோது, "நாங்கள் முழுமையாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை சார்ந்துள்ளோம். சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் நாங்கள் ஏற்படுத்துவதில்லை." என்று பதிலளித்தது.
"தரவு மையத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆற்றல் கார்பன் இல்லாததாக இருக்க வேண்டும். கடல் நீரை சுத்திகரித்து தரவு மையத்தை இயக்கப் பயன்படுத்த வேண்டும். மேலும், தரவு மையத்தில் உள்ள சேவையகங்களிலிருந்து வரும் வெப்பத்தை மின்சாரமாக மாற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். கூகுள் அதன் நீர் தேவைகளுக்காக நீர்த்தேக்கங்களை அமைக்க வேண்டும்" என்று ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர் இயூபி ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
பிற தரவு மையங்கள்தர்லுவாடாவில் உள்ள கூகுள் தரவு மையம், வரவிருக்கும் பிற நிறுவனங்களுக்கு ஒரு நுழைவாயிலாக மாறக்கூடும் என்று நரேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் கூகுள் தரவு மையத்துடன் சேர்த்து மேலும் பல தரவு மையங்கள் வரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவை...
• அதானி டேட்டா சென்டர் - அதானி கனெக்ஸ் (200 மெகாவாட்) (கூடுதலாக, அதானி மற்றும் பாரதி ஏர்டெல் குழுமங்கள் தர்லுவாடாவில் உள்ள 1 GW கூகுள் டேட்டா சென்டரில் கூட்டாளிகளாக உள்ளன)
• ரிலையன்ஸ் - (RIL - 1 GW)
• சிஃபி டெக்னாலஜிஸ்- (Sify - 500 MW)
• ஏஆர்பிசிஎல் - (ARPCL - 117 MW)
• டில்மேன் குளோபல் - (Tillman - 300 MW) தரவு மையங்களை அமைக்க நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு