இந்தியாவில் 99% மாவட்டங்களில் 5ஜி சேவை வழங்கியதன் மூலம் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை புதிய சாதனையை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 5ஜி சேவை 99.90% அளவில் செயல்படுத்தப்பட்டு, 2025ஆம் ஆண்டில் சாதனை படைத்துள்ளது. தொலைத் தொடர்பு சேவைகள் வழங்குவதில், தனியார் நிறுவனங்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் எம்டிஎன்எல் (MTNL) மந்தமாக செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டை மத்திய தொலைத்தொடர்பு துறை இந்த சாதனையால் முறியடித்துள்ளது.
இதையும் படிக்க: ChatGPT பயன்படுத்த வேண்டாம் என ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. ஷாக் தகவல்..
பிராட்பேண்ட் மிஷன் 2.0 திட்டம்:தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்த அரசு மேற்கொண்ட கடுமையான முயற்சி தான் இதற்கான முக்கிய காரணமாகும். நாட்டை டிஜிட்டல் மாற்றத்தின் புதிய நிலைக்கு முன்னேற்றும் நோக்கில் மத்திய அரசு தொடங்கிய தேசிய பிராட்பேண்ட் மிஷன் 2.0 திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில், மக்களை நோக்கிச் செல்லும் தொலைத்தொடர்பு சேவையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக, 99.90% மாவட்டங்களில் 5ஜி சேவை கிடைக்கிறது. இதற்காக நாடு முழுவதும் 5.8 லட்சம் டிரான்ஸீவர் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு 19.35 லட்சம் கிலோமீட்டராக இருந்த ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் நீளம் தற்போது 42.36 லட்சம் கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2,14,843 கிராமங்கள் பிராட்பேண்ட் இணைப்பைப் பெற்றுள்ளன. கிராமப்புற தொலைபேசி இணைப்புகள் 42.9% வளர்ச்சி கண்டுள்ளன.
இந்தியாவில் 100 கோடி இணைய இணைப்புகள்:மத்திய தொலைத்தொடர்பு துறையின் மேம்படுத்தப்பட்ட பணிகளால், இந்தியாவில் இணைய இணைப்புகள் 100 கோடியை கடந்துள்ளன. 2014ஆம் ஆண்டு 25.15 கோடியாக இருந்த இணைய இணைப்புகள் தற்போது 100.29 கோடியாக உயர்ந்து 298.77 சதவீத வளர்ச்சி கண்டுள்ளன. 2014ஆம் ஆண்டு 6.1 கோடியாக இருந்த பிராட்பேண்ட் இணைப்புகள் இவ்வாண்டு 99.56 கோடியாக உயர்ந்து 1,532 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்தியாவில் சொந்த 4ஜி:சி-டாட், தேஜாஸ் நெட்வொர்க்ஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்பில் பிஎஸ்என்எல் மூலம் இந்தியா தனது சொந்த 4ஜியை உருவாக்கிய 5 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. “சஞ்சார் சாத்தி” செயலியின் மூலம் 26.35 லட்சம் திருட்டு மற்றும் காணாமல் போன மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மோசடி பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளதால் ரூ.450 கோடி நிதி இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : EPFO : 2025-ல் பென்ஷன் குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்த இபிஎஃப்ஓ!
வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட அவசரகால காலங்களில் கூட தடையற்ற தொலைத்தொடர்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் பணிகளில் இந்தியா முன்னேறி வருகிறது. இந்த விவரங்கள், மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.