உத்தரப் பிரதேச மாநிலம் பதோகி மாவட்டத்தில், குடிபோதையில் வந்த தந்தை தனது 4 வயது மகனைத் தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள குவாலி கிராமத்தைச் சேர்ந்த ராம்ஜி வனவாசி என்பவர், சனிக்கிழமை நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ராம்ஜி, அங்குக் தூங்கிக் கொண்டிருந்த தனது 4 வயது மகன் விகாஸை வலுக்கட்டாயமாகத் தூக்கி, தரையில் பலமுறை ஓங்கி அடித்துள்ளார்.
பலத்த காயமடைந்த குழந்தைக்குக் குடும்பத்தினர் முதலுதவி செய்ய முயன்றனர், ஆனால் சிறுவன் விகாஸ் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த கொடூரச் செயலைச் செய்துவிட்டு ராம்ஜி வனவாசி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து குழந்தையின் பாட்டி பிரபாவதி தேவி அளித்த புகாரின் பேரில், சூரியவான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராம்ஜியை இன்று கைது செய்தனர்.
குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஒரு தந்தையே தனது பிள்ளையை இப்படி அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.