கொல்கத்தாவில் நடைபெற்ற லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டு, அவரிடம் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
மெஸ்ஸியின் பாதுகாப்பிற்கு வந்த வெளிநாட்டு அதிகாரிகள், அவரை தொடவோ அல்லது கட்டிப்பிடிக்கவோ கூடாது என முன்கூட்டியே எச்சரித்திருந்தனர். ஆனால், மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் மெஸ்ஸியை இடுப்பில் கைவைத்து பிடிப்பதும், கட்டிப்பிடிப்பதும் அவருக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அவர் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வெளியேறினார். இதற்கிடையே, முறைகேடு புகார்களால் அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மெஸ்ஸியின் இந்த வருகைக்காக மொத்தம் ரூ.100 கோடி செலவிடப்பட்டுள்ளது; இதில் ரூ.89 கோடி மெஸ்ஸிக்கான ஊதியமாகும். முதலில் 150 பேருக்கு மட்டுமே மைதான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், "செல்வாக்கு மிக்க நபர்" ஒருவரின் தலையீட்டால் அந்த எண்ணிக்கை மும்மடங்காக உயர்த்தப்பட்டு பாதுகாப்பு சீர்குலைந்தது. தத்தாவின் வங்கி கணக்கில் இருந்த ரூ.20 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியும் மெஸ்ஸியை நெருங்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மைதானத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
Edited by Siva