2026 டி20 உலகக் கோப்பை: சரியாக செலக்ட் பண்ணி அசத்திட்டீங்க..– அகர்கர் தேர்வுக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு
Seithipunal Tamil December 22, 2025 01:48 AM

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த அணியில், துணைக் கேப்டனாக இருந்த சுப்மன் கில் இடம் பெறாதது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் மோசமான ஃபார்மில் திண்டாடி வந்தாலும், உலகக் கோப்பை அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியின் நலனே முக்கியம் என்பதால், ஃபார்மில் இல்லாத கில்லை கழற்றி விட்டதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அதேபோல், கடைசி நேரத்தில் இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சயீத் முஸ்டாக் அலி 2025 கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்து, ஜார்க்கண்ட் அணிக்கு முதல் முறையாக கோப்பை வென்று கொடுத்த அவர், மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதன் அடிப்படையில் பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் ஜிதேஷ் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், மிடில் ஆர்டரில் அதிரடி ஃபினிஷராக விளையாடக்கூடிய ரிங்கு சிங்கும் கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்வு குறித்து முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அவர், “இந்த தேர்வுக்காக அஜித் அகர்கர் மற்றும் அணி நிர்வாகத்திற்கு 10க்கு 10 மதிப்பெண்கள் தருவேன். சுப்மன் கில் இடம் பெறாதது உணர்ச்சிப்பூர்வமாக கடினமாக இருந்தாலும், அது சரியான முடிவு. இது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவு அல்ல. அணியின் நலனை கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட முடிவுகள் எப்போதும் எடுக்கப்படுகின்றன” என்றார்.

மேலும், “ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டதற்காகவும், இஷான் கிஷான் மீண்டும் அணிக்கு வந்ததற்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சிறப்பாக விளையாடினால் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என்பதற்கான நல்ல உதாரணம் இது” என்றும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வுக்கு பல ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.