மும்பை லோக்கல் ரயிலில் கல்லூரி மாணவி ஒருவரை 50 வயது நபர் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பன்வெல் – சிஎஸ்எம்டி (Panvel-CSMT) செல்லும் ரயிலின் பெண்கள் பெட்டியில் ஷேக் அக்தர் நவாஸ் என்ற நபர் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கிருந்த பெண் பயணிகள் அவரை இறங்குமாறு கூறியதால் ஆத்திரமடைந்த அந்த நபர், வாசலில் நின்று கொண்டிருந்த 18 வயது கல்லூரி மாணவி ஸ்வேதா மகாதிக் என்பவரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் செயலுக்குப் பின் காந்தேஸ்வர் (Khandeshwar) ரயில் நிலையத்தில் இறங்கித் தப்பியோட முயன்ற அந்த நபரை, சக பயணிகளின் உதவியோடு ரயில்வே போலீஸார் (GRP) மடக்கிப் பிடித்தனர்.
தண்டவாளத்தில் விழுந்த மாணவிக்குத் தலை மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிவதாகவும், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு இல்லாத இந்தச் சம்பவம் மும்பை பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.