தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய புள்ளியாக உருவெடுத்துள்ளார். அண்மையில், அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இது வெறும் 'மரியாதை நிமித்தமான' சந்திப்பு என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டாலும், தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்
நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லி அரசியலில் தீவிரமாக இருந்தாலும், கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் விவகாரங்களில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
கள அரசியலில் நேரடி அனுபவம் குறைவு என்ற விமர்சனங்கள் நிர்மலா சீதாராமன் மீது இருந்தாலும், பாஜக தேசிய தலைமையின் 'தமிழகத் தூதுவராக' செயல்படுகிறாரா என்ற கேள்வி தற்போது வலுத்துள்ளது. தமிழகத்தின் நிதி நிலைமை மற்றும் தேர்தல் கால கூட்டணி கணக்குகளை தீர்மானிப்பதில் அவரது பங்கு இனி வரும் நாட்களில் மிக முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva