விமான நிலையத்தில் விமானி ஒருவர் பயணியைத் தாக்கிய சம்பவம் ஏற்கனவே பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் ஐ.ஜி.எம்.சி (IGMC) ஷிம்லா மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நோயாளியைத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது. பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய விமானியும், உயிர் காக்க வேண்டிய மருத்துவருமே இத்தகைய வன்முறையில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிம்லா மருத்துவமனையில் படுக்கையில் இருந்த நோயாளியை அந்த மருத்துவர் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் தற்போது எக்ஸ் (X) வலைத்தளத்தில் தீயாகப் பரவி வருகிறது.
சக ஊழியர்கள் தடுத்தும் கேட்காமல், ஆத்திரத்தில் அந்த மருத்துவர் நோயாளியைத் தாக்கும் விதம் மருத்துவ உலகையே தலைகுனிய வைத்துள்ளது. ஏற்கனவே விமானி ஒருவரின் அத்துமீறலால் விமானப் போக்குவரத்துத் துறை விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இப்போது மருத்துவத் துறையிலும் இத்தகைய மனிதநேயமற்ற செயல் அரங்கேறியுள்ளது. சேவைத் துறையில் இருப்பவர்கள் பொறுமை இழந்து வன்முறையைக் கையில் எடுப்பது சமூகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.