சமீபத்தில் வங்கதேசத்தில் முஸ்லிம் மதத்திற்கு எதிராக, அவர்களில் இறை தூதர் என்று போற்றப்படும் நபி அவர்களை அவதூறாக பேசி, வெறுப்பு கருத்துக்கள் பரப்பியதாக ஹிந்து இளைஞர் ஒருவரை முஸ்லீம் கும்பல் ஒன்று அடித்தே கொன்று, சாலையில் தீயிட்டு எரித்தனர். இந்த வழக்கில், கொல்லப்பட்ட ஹிந்து இளைஞர் மத வெறுப்பை பரப்பியதற்கு நேரடி ஆதாரங்கள் ஏதுமில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தின் மைமென்சிங் நகரை சேர்ந்தவர் ஹிந்து இளைஞரான திபு சந்திர தாஸ் என்ற 27 வயதுடைய நபர், அங்குள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவாமி லீக் கட்சியினரால் சுடப்பட்ட வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்த செய்தி கடந்த 18-ஆம் தேதி இரவு வெளியானதை அடுத்து வங்கதேசத்தின் பல நகரங்களில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தை பயன்படுத்தி மைமென்சிங் நகரில் ஒரு கும்பல் திபு சந்திர தாஸை அடித்து கொன்றுள்ளது.

அத்துடன், நுாற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அவரின் உடலை மரத்தில் கட்டி தீயிட்டு அந்த கும்பல் கொடூரமாக எரித்தது. அப்போது அவர் முஸ்லிம் மதத்திற்கு எதிராக வெறுப்பு கருத்துகளை பரப்பியதாக அந்த கும்பல் குற்றம் சுமத்தியது. இந்த மனிதாபிமானம் அற்ற இந்த கொடுர செயலுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதையடுத்து இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து வங்கதேச போலீஸ் உயரதிகாரி சம்சுஜமான் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

கொல்லப்பட்ட ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் மதவெறுப்பை துாண்டும் வகையில் பதிவு செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது ஒரு வதந்தியால் ஏற்பட்ட கொடூரச் செயல் எனத் தெரிகிறது. அவருடன் வேலை பார்த்தவர்களிடம் விசாரித்த போதும், திபு எந்த மத வெறுப்பு கருத்துக்களையும் கூறி கேட்டதில்லை என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது வங்கதேசம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிறைந்து காணப்படுகின்ற சூழலில், டாக்கா பல்கலையின் ஒரு அரங்கிற்கு அந்நாட்டின் முதல் பிரதமரும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான முஜிபுர் ரஹ்மான் பெயர் இருந்தது. தற்போது அந்த பெயரை நீக்கிவிட்டு, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களையம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்த, சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி பெயரை பல்கலை நிர்வாகம் சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.