கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் கரோல் பாடிச் சென்ற சிறுவர்களை தாக்கியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டத்தை ச் சேர்ந்த அஸ்வின் ராஜ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கரோல் பாடிச் சென்ற 14 வயதுக்குட்பட்ட சில சிறுவர்களை வழிமறித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அப்போது, சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் ‘சி.பி.ஐ.(எம்)’ என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த அஸ்வின் ராஜ், சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அந்தச் சிறுவர்களை கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டி, அவர்களை தாக்கியதுடன் இசைக்கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளார். தாக்குதலுக்கு அஞ்சி சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் சி.பி.ஐ.(எம்) கட்சியினர் கூறுகையில், தாக்குதலுக்குள்ளான சிறுவர்கள் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர்கள் என்றும், கிறிஸ்துமஸ் காலத்தில் வழக்கமாக கட்சியின் இசைக்கருவிகளை சிறுவர்கள் பயன்படுத்த அனுமதிப்பது நடைமுறையாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் அஸ்வின் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுவர்கள் மீது நடந்த இந்த தாக்குதல் சம்பவம் கேரளா முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.