திரைப்படங்களில் மட்டுமே காணக்கூடிய உண்மைக் காதலின் சாட்சியாக, பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரோசெரா நகரின் 20-வது வார்டைச் சேர்ந்த விஷ்ணுதேவ் சாஹ்னி (85) என்பவர் சனிக்கிழமை மதியம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, மகன் தரம் சாஹ்னி மற்றும் உறவினர்கள் சேர்ந்து கண்டக் ஆற்றங்கரையில் அன்றைய தினமே இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தனர்.
பல தசாப்தங்களாகத் தன்னோடு வாழ்ந்த கணவரின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத அவரது மனைவி லால்பரி தேவி (80), கணவரின் உடல் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டதிலிருந்தே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். துக்கம் தாளாமல் நிலைகுலைந்த லால்பரி தேவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி, கணவர் இறந்த அதே நாளில் இரவு 9 மணியளவில் அவரது உயிரும் பிரிந்தது.
கணவர் மறைந்த ஆறே மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்தது அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வாழ்நாள் முழுவதும் அன்பும் நம்பிக்கையுடனும் வாழ்ந்த இந்தத் தம்பதியினர், சாவிலும் பிரியாமல் ஒருவரை ஒருவர் பின் தொடர்ந்தது அனைவரது கண்களையும் குளமாக்கியது. லால்பரி தேவியின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. “இப்படிப்பட்ட உன்னதக் காதல் அரிதானது” என்று அந்த ஊர் மக்கள் கண்ணீர் மல்கத் தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.