உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தங்கள் ஊழியர்களுக்குக் கார்கள் அல்லது விலையுயர்ந்த பரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால், சீனாவைச் சேர்ந்த வாகன உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனமான ‘ஷெஜியாங் குவோஷெங் ஆட்டோமோடிவ் டெக்னாலஜி’, தனது ஊழியர்களைத் தக்கவைக்க 18 சொகுசு வீடுகளைப் பரிசாக வழங்கும் திட்டத்தை அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தென்கிழக்கு சீனாவின் வென்ஜோ நகரில் அமைந்துள்ள இந்த நிறுவனம், 450-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் ஆண்டுக்கு சுமார் 580 கோடி ரூபாய் (70 மில்லியன் டாலர்) வருவாய் ஈட்டி வருகிறது. திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் மேலாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு 100 முதல் 150 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட வீடுகள் வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் பொது மேலாளர் வாங் ஜியாயுவான் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக ஏற்கனவே 18 அடுக்குமாடி குடியிருப்புகளை சுமார் 12.7 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவனம் வாங்கியுள்ளது. இவை அனைத்தும் அலுவலகத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிலேயே அமைந்துள்ளதால் ஊழியர்களின் பயண நேரமும் மிச்சமாகும். நடப்பாண்டில் ஏற்கனவே ஐந்து ஊழியர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மேலும் எட்டு வீடுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பரிசுத் திட்டத்தின்படி, வீட்டைப் பெற்றுக் கொள்ளும் ஊழியர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அதன் பிறகு வீட்டின் முழு உரிமையும் அவர்களுக்கு மாற்றப்படும்; ஊழியர்கள் வீட்டின் புதுப்பித்தல் செலவை மட்டும் நிறுவனத்திற்குத் திருப்பிச் செலுத்தினால் போதும்.
ஒரு சாதாரணத் தொழிலாளியாகச் சேர்ந்து மேலாளராக உயர்ந்த இருவருக்கு ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.