உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி அருகே மல்கான் ரயில்வே கேட் பகுதியில், சரக்கு ரயில் ஒன்றின் லோகோ பைலட் தனது தனிப்பட்ட தேவைக்காக ரயிலை நடுவழியில் நிறுத்திய சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. என்.டி.பி.சி திட்டத்திற்காக நிலக்கரியை இறக்கிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த அந்தச் சரக்கு ரயில், மல்கான் பகுதியில் வந்தபோது திடீரென நிறுத்தப்பட்டது.
சுமார் 10 நிமிடங்கள் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நின்றதால், அந்தச் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. அப்போது லோகோ பைலட் ரயிலிலிருந்து கீழே இறங்கி அருகில் உள்ள கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி வந்ததாக நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் இது குறித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மத்தியப் பிரதேசத்தின் பலாகாட் பகுதியில் மற்றொரு அதிர்ச்சிகரமான ரயில்வே விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பலாகாட்டிலிருந்து வாரசிவானி நோக்கிச் சென்ற விரைவு ரயிலின் பாதையில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் தண்டவாளத்தின் குறுக்கே நின்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ரயிலின் வேகத்தைக் குறைப்பதற்காக லோகோ பைலட் உடனடியாக அவசர கால பிரேக்கைப் பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அந்த மதுபோதை நபரைத் தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தித் தர்ம அடி கொடுத்தனர்.
இந்த இரண்டு சம்பவங்களும் ரயில்வே பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. லோகோ பைலட்டின் கவனக்குறைவு மற்றும் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.