சென்னை, டிசம்பர் 23 : தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் (Christmas) மற்றும் புத்தாண்டை முன்னிட்டு 10 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறைவிடப்படுவது வழக்கம். பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறைகள் தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரையாண்டுத் தேர்வுகளுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வரும் டிசம்பர் 24, 2025 அன்று முதல் விடுமுறை தொடங்க உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் முடிவடைந்த பின், ஜனவரி 5, 2025 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு எச்சரிக்கைஇந்த நிலையில், திருச்சியில் டிசம்பர் 23, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரையாண்டு விடுமுறைகளின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தார். விடுமுறை என்பது மாணவர்கள் மனஅழுத்தத்திலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெறுவதற்காக வழங்கப்படுவதாகவும், அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு மீண்டும் கல்விச் சுமை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, தனியார் பள்ளிகள் இந்த அறிவுறுத்தலை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க : அரையாண்டு விடுமுறை.. ஜன. 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..
மேலும், தமிழக அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதுவரை 9,416 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அடுத்த கட்டமாக மேலும் 7,898 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், புதிய கட்டடங்கள் கட்டப்படும் காலகட்டத்தில், மாணவர்கள் சமூகக் கூடங்கள் அல்லது வாடகை கட்டடங்களில் அமர வைத்து வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அன்பில் மகேஷ் விளக்கம்அதேபோல், அரசு ஊழியர்கள் தொடர்பான விவகாரத்திலும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகவும், இருப்பினும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார். இந்த விவகாரத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதிக்குள் நல்ல செய்தி அளிப்பார் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதையும் படிக்க : புத்தாண்டு கொண்டாட்டம்.. குழந்தைகளுக்கு நோ எண்ட்ரி.. மீறினால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு..
மாணவர்களின் நலன், கல்வி சூழல் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அரையாண்டு விடுமுறையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.